Monday, 14 October 2013

Tagged Under:

பாய்லின் புயல் தாக்கியதில் ஒடிசாவில் 90 லட்சம் பேர் பாதிப்பு:ரூ. 2400 கோடி சொத்துக்கள் நாசம்!

By: ram On: 20:15
  • Share The Gag
  • வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசா மாநிலம் கோபால் பூருக்கு அருகில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மிக பலத்த மழை பெய்தது.பாய்லின் புயல் வரலாறு காணாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டதால் ஒடிசா மாநில அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்தது. சுமார் 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.


    14 - odisa

     


    இதன் காரணமாக பாய்லின் புயல் தாக்குதலில் இருந்து மாபெரும் உயிரிழப்பை ஒடிசா மாநில அரசு வெற்றிகரமாக தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும் ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்கள் பாய்லின் கோரத் தாண்டவத்தால் பலத்த சேதத்தை சந்தித்து நிலை குலைந்து போய் உள்ளன.


    பாய்லின் புயல் தாக்குதலில் சிக்கி 23 பேர் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாய்லின் புயல் நேற்று காலை ஒடிசாவில் இருந்து பீகாருக்கு சென்றது. இதைத் தொடர்ந்து ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


    மக்களின் உயிரைக் காப்பாற்றவே மீட்புப் பணிகளில் முதலிடம் கொடுக்கப்படும் என்று ஒடிசா முதல்–மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அதற்கு ஏற்ப ராணுவ வீரர்களும், தேசிய மேலாண்மை பேரிடர் மீட்புக் குழுவினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 ஆயிரம் பேர் மீட்புப் பணிகளை செய்து வருகிறார்கள்.


    பாய்லின் புயலால் ஒடிசாவில் மட்டும் 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் ஸ்ரீகா குளம், விஜயநகரம் மாவட்ட மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்று வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.


    பாய்லின் நடத்திய கோரத்தாண்டவத்தில் சுமார் 2½ லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சுமார் ஒரு லட்சம் வீடுகள் முழுமையாக அழிந்து விட்டன.


    பாய்லின் சீற்றத்துக்கும், மழை வெள்ளத்துக்கும் 14,500 கிராமங்களில் மக்களின் சொத்துக்களுக்கு கடும் நாசம் ஏற்பட்டுள்ளது. 15 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புயல் வேகத்தால் அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.


    5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி அழிந்து விட்டன. மீனவர்களின் வாழ்வா தாரங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் 2400 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


    லட்சக்கணக்கான மக்கள் அடுத்த வேளை உணவு, உடைக்கு ஏங்கியபடி உள்ளனர். ஒடிசா மாநில அரசு இத்தகைய சேதத்தை எதிர்பார்த்து 5 டன் உணவு தானியங்களை கை இருப்பு வைத்திருந்தது.


    அந்த உணவு தானியங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஒடிசா மாநில அரசு மிகத் திறமையாக எல்லாவித ஏற்பாடுகளையும் செய்திருந்ததால், மாபெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.


    அதோடு நிவாரண பணிகளும் திட்டமிட்டப்படி தொடங்கி நடந்த வருகிறது. இன்னும் 48 மணி நேரத்தில் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொடுத்து விடுவோம் என்று ஒடிசா மாநில அரசு அறி வித்துள்ளது.

    0 comments:

    Post a Comment