Thursday, 17 October 2013

Tagged Under:

செவ்வாய் கிரகத்துக்கு மங்கல்யான் விண்கலம்28ம் தேதி ஏவப்படுகிறது!

By: ram On: 08:03
  • Share The Gag


  •  இந்திய விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக செவ்வாய்கிரகத்துக்கு மங்கல்யான் விண்கலம் 28ம் தேதி அனுப்பப்படுகிறது. புவி வட்டப்பாதை வரை பி.எஸ்.எல்.வி, சி,25 ராக்கெட்டில் செலுத்தப்படும் இந்த விண்கலம் மங்கல்யான், அதன்பிறகு அதிலேயே பொருத்தப்பட்டுள்ள மோட்டார் மூலம் புவி வட்டப்பாதையை கடந்து செவ்வாய் கிரகத்தின் வட்டப்பாதையில் நுழையும்.

    இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் ( இஸ்ரோ) சார்பில் இதுவரை 105 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் இந்திய  மற்றும் வெளிநாடுகளின் செயற்கை கோள்களை எடுத்துச்சென்று விண்ணில் நிலைநாட்டியுள்ளன. இதில் அதிகளவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் வெற்றி பெற்றுள்ளன. கல்விப்பயன்பாடு, சுற்றுச்சூழல்பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, வாகனங்கள் கண்காணித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு இந்திய செயற்கை கோள்கள் பெரிதும் உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக செவ்வாய்கிரகத்துக்கு விண்கலம் ஏவும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

    அதற்காக மங்கல்யான் என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலம், மற்றும் இதர துணை அமைப்புகள், பி.எஸ்.எல்.வி சி,25 ராக்கெட் ஆகியவை  ரூ.450 கோடியில் வடிவமைக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப்பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி சி,25 ராக்கெட் மூலம் மங்கல்யான் விண்கலம் புவி வட்டப்பாதை வரை கொண்டு செல்லப்படும். பின்னர் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்கள் இயங்கத்தொடங்கி, புவி வட்டப்பாதையை கடந்து செவ்வாய் வட்டப்பாதையில் விண்கலத்தை கொண்டு செல்லும்.

    இந்த ராக்கெட் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.  மங்கல்யான் விண்கலம் செவ்வாயில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழ முடியுமா போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். விண்கலத்தில்,  லைமேன் ஆல்பா போட்டோ மீட்டர், மீத்தேன் சென்சார் கருவி என்ற தட்பவெப்ப ஆய்வுக்கருவி, மார்ஸ் எக்சாஸ்பியரிக் காம்போசிஷன் அனலைசர் என்ற சுற்றுச்சூழல் ஆய்வுக்கருவி, மார்ஸ் கலர் கேமரா எனப்படும் செவ்வாயின் தரைத்தளங்களை படம் பிடிக்கும் கேமரா, டி.ஐ.எஸ் என்ற ஸ்பெக்ட்ரோ மீட்டர் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் ஆன்டனாக்கள், சோலார்பேனல்கள் போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளன.

    பி.எஸ்.எல்.வி சி,25 ராக்கெட்டை நாளை 18 ம் தேதி விண்ணில் செலுத்துவதாக இருந்தது. ஆனால் திடீரென்று பைலின் புயல் தாக்கியதால் வானிலை நிலவரம் ராக்கெட் ஏவும் நிலையில் இல்லை. இதையடுத்து இஸ்ரோ மேற்கொண்ட ஆய்வுகளில் அக்டோபர் 28 முதல் நவம்பர் 19 வரையான கால கட்டங்களில் பருவநிலை சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அக்டோர் 28 ம் தேதி பி.எஸ்.எல்.வி சி,25 விண்ணில் செலுத்தப்படுகிறது.

    இதையொட்டி ராக்கெட்டின் இறுதி கட்டப்பணிகள் முழுவீச்சில் ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்து வருகின்றன. உதிரி பாகங்கள், உந்து இன்ஜின்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு நிலை பணிகளும் முடிக்கப்பட்டு ஏவுதளத்துக்கு ராக்கெட் கொண்டு வரப்பட்டு, இதர பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    எக்ஸ்ட்ரா தகவல்

    செவ்வாய் கிரகத்தில் குடியேற உலக அளவில் 1.6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 8 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 87 பேர்.

    0 comments:

    Post a Comment