Thursday, 5 September 2013

Tagged Under: ,

நல்லாசிரியர் விருதின் லட்சணம் இதுதான்!

By: ram On: 07:33
  • Share The Gag

  • இன்று ஆசிரியர் தினம்.

    நிகழ் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) பெறுவோர் பட்டியலை தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இது தவிர, மத்திய அரசும் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கிறது. ஆசிரியர்களைப் பாராட்டுமுகமாக, அவர்களை ஊக்குவிக்க இத்தகைய விருதுகள் வழங்கப்படுவது இன்றியமையாதது. ஆனால் நல்லாசிரியர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறு தெரிவு செய்கிறார்கள் என்று பார்த்தால், இன்னமும், அதிகார வரம்புக்குள்தான் இந்த விருது அடங்கிக் கிடக்கிறது என்பதும் இந்தப் பரிந்துரை இன்னமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவர் மூலமாகத்தான் அரசுக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரியும்.

    இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த ஆசிரியர்களே வாங்கி, தங்கள் சாதனைக்கான சான்றுகளாகப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவற்றை இணைத்து, பிரமுகர்களின் பரிந்துரைகளைப் பெற்று, மாவட்ட கல்வித் துறையிடம் கொடுக்க வேண்டும். அதை இதற்கென அமைக்கப்பட்ட ஒரு குழு தேர்வு செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தரும். அவர் இந்தப் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைப்பார்.

    sep 5 - Happy-Teachers-Day-Card

     

    தனது பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பள்ளிச் சீருடையில் சில குறைந்திருந்தால் அதற்காக குரல் கொடுத்து, சண்டைபோட்டு அனைவருக்கும் சீருடை வாங்கித்தரும் ஒரு கிராமத்து பள்ளித் தலைமையாசிரியரை கல்வித் துறை எதிரியாக புறக்கணிக்கும்.
    அரசு வழங்கும் இலவச புத்தகம் வந்து சேரவில்லை என்பதற்காக போராடவும், உள்ளூர் நிருபர்கள் மூலம் செய்தியாக்கி, அரசுக்கு நெருக்கடி தரும் ஆசிரியர்கள், நேரத்துக்கு ஆசிரியர்கள் வகுப்புக்கு போக வேண்டும், ஒழுங்காக பாடம் நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தலைமையாசிரியர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கல்வித் துறைக்கும் பெருந்தலைவலி! அவர்களுக்கு நல்லாசிரியர்கள் விருது நிச்சயம் கிடைக்காது.

    இந்த நிலையில், நல்லாசிரியர் விருது என்பது, மாவட்டக் கல்வித் துறைக்கு இணக்கமாக செயல்படும் பணிவான ஆசிரியர்களுக்குத்தான்! இதிலும் விதிவிலக்காக சில நல்லாசிரியர்கள் அமையலாம்.

    இந்த விருது இன்னமும் கௌரவ விருதாக இருப்பதால் – அதாவது சன்மானம் மிகக் குறைவாக இருப்பதால் – இதில் ஊழல் இருக்காது என்று நம்புவோம். இருப்பினும்கூட, மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுடன் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதைப் பொருத்தும்தான் விருது கிடைப்பது உறுதியாகிறது என்பதை மறுப்பதற்கில்லை. விதிவிலக்காக சில விண்ணப்பங்கள் அமையலாம். இதன் பிறகு இந்த நல்லாசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில், ரோட்டரி, அரிமா சங்கங்கள் மூலமாக பாராட்டு விழா நடத்துவதும் நடத்திக்கொள்வதும் நடக்கிறது
    இத்தகைய தெரிவு முறை இந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடியதா என்ற சிந்திக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.
    ஒரு ஆசிரியரை நல்லாசிரியர் என்று சொல்லத் தகுதி படைத்தவர்கள் மாணவர்கள் மட்டுமே!

    ஒரு ஆசிரியர் தன்னிடம் எப்படி அன்பாக அல்லது கண்டிப்புடன் இருந்தார்; பாடம் நடத்துவதில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டினார்; மாணவர்கள் எழுதிய பாடங்களை திருத்திக்கொடுத்து, அவர்களை நேரடியாக அழைத்து அந்த மாணவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தினார்; பாடத்திட்டத்துக்கு வெளியிலான நூல்கள், நல்ல எழுத்தாளர்களைப் பற்றி அறிமுகம் செய்து, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தார்; எத்தனை ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியாக இருந்தார்; மாணவ/மாணவிகளிடமும் உடன்பணிபுரிந்த ஆசிரியை/ ஆசிரியர்களிடமும் அவர் (ஆசிரியை/ஆசிரியர்) நடந்துகொண்ட விதம், பேசிய விதம் எவ்வாறு என்பதையெல்லாம் நேரில் கண்ட மாணவர் சமுதாயம் மட்டுமே ஒரு ஆசிரியரை நல்லாசிரியர் எனச் சொல்ல தகுதி பெற்றவர்கள்.

    2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி, ராசிபுரம் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான குரு நிவாஸ் என்ற வீட்டை, வெங்கட்ராமன் என்கிற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் தங்கள் சொந்தச் செலவில் கட்டி, அவரிடம் ஒப்படைத்தார்கள். இவர், குருசாமிபாளையம், செங்குந்தர் மகாஜனம் மேனிலைப் பள்ளியில் 1954 முதல் 85 வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கழிந்த பிறகும் அவரை முன்னாள் மாணவர்கள் நினைவில் நிறுத்தி வைக்கிறார்கள் என்றால், அவரது தாக்கம், பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்! இது ஒரு சம்பவம் மட்டுமே.


     இதுபோன்று வெளியில் தெரிய வராத நிகழ்வுகள் பல இருக்கும். முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு நிதிஉதவி செய்வதும், மருத்துவ உதவி செய்வதும், ஊர்ப்பக்கம் போகும்போது அவரை இனிப்புடன் சந்தித்து பேசுவதும், குறைந்தபட்சமாக ஒரு பொதுநிகழ்வில் தனது மனம் விரும்பும் ஆசிரியர் வரும்போது முகமலர்ச்சியுடன் எழுந்து வணக்கம் சொல்வதும்கூட மிகப்பெரிய விருதுதான்.

    ஒரு ஆசிரியரை, அவர் சொன்ன வார்த்தைக்காக, அவருடைய பண்புக்காக, நடத்தைக்காக, சொல்லித்தந்த கல்விக்காக, ஒரு மாணவர் தன் வாழ்வின் பல நேர்வுகளில் திரும்பத் திரும்ப நினைவுகூர முடிகிறது என்றால், அந்த ஆசிரியர் நல்லாசிரியர்தான் – அரசு விருது பெறாத போதிலும்! “இந்த ஆளுக்கா விருது கொடுத்தாங்க…’ என்று ஒரு முன்னாள் மாணவர் விரக்தியுடன் விமர்சனம் செய்தால், அவர் நல்லாசிரியர் விருது பெற்று, பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டாலும்கூட, அவர் நல்லாசிரியர் அல்லர்.

    0 comments:

    Post a Comment