Friday, 13 September 2013

Tagged Under: ,

உடல் நாற்றம்... தவிர்க்க வழிகள்

By: ram On: 08:12
  • Share The Gag

  • உடல் நாற்றம்... தவிர்க்க வழிகள்

    நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமாக மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அதுதான் காரணம். அதீதமான வியர்வை மற்றும் அதன் காரணமாக உண்டாகும் நாற்றத்துக்கு Acid bromidrosis மற்றும் osmidrosis என்று பெயர்.

    பெண்களுக்கு 14 - 16 வயதிலும், ஆண்களுக்கு 15 - 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்சனை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 - 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. ‘எக்ரைன்’ (eccrine) என்கிற வியர்வைச் சுரப்பிகள் நம் உடலில் எல்லா இடங்களிலும் சருமத்தின் அடியில் இருக்கும்.

    வெளிப்புறத் தட்பவெப்பநிலை அதிகரிக்கும் போது, அதிலிருந்து உடலைக் காப்பாற்றிக் குளிர்ச்சியாக்கும் பொருட்டு இந்த சுரப்பிகள் தூண்டப்படுவதால்தான் வியர்வை வெளியே வருகிறது. அதனால்தான் நமக்கு முகத்திலோ, கைகளிலோ வியர்க்கும்போது, அது அதிக வாசனையை ஏற்படுத்துவதில்லை.

    அப்போக்ரைன் (apocrine) என்கிற சுரப்பிகள் அக்குள், காதுகளின் பின்புறம், அந்தரங்க உறுப்புகளில் அதிகம் காணப்படும். இவை வியர்வையை வெளிப்படுத்தும்போது, அத்துடன் எண்ணெய் பசையான திரவமும் சேர்ந்து வெளியேறுவதால், அந்த இடத்தில் எல்லாம் வியர்க்கும் போது வாசனை அதிகமாக இருக்கிறது.

    அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும். நிறமும் மணமும் சேர்க்கப்பட்ட ‘பாத் சால்ட்’ கிடைக்கிறது. ஒரு பக்கெட் தண்ணீரில் 1 டீஸ்பூன் பாத் சால்ட் கலந்து குளிக்கலாம். அது முடியாதவர்கள், கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.

    டீ ட்ரீ அல்லது லேவண்டர் - இந்த இரண்டில் ஏதேனும் ஒரு அரோமா ஆயிலில் சில துளிகளை பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம். தினம் இருமுறை டியோடரன்ட் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், உடலைத் துடைத்து விட்டு, வியர்க்க ஆரம்பிக்கும் முன்பே இதை உபயோகிக்க வேண்டும்.

    கேஸ் இல்லாத டியோடரன்ட் நல்லது. அதை உபயோகிக்கும் போது எரிச்சலோ, குத்தலோ இருந்தால் உபயோகிக்க வேண்டாம். வியர்வையையே நிறுத்தக்கூடிய ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் என்ற பொருளும் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அலுமினியம் சால்ட் கலந்திருப்பதால் அதை தினசரி உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

    முக்கியமான விசேஷம், உடையில் வியர்வைத் தடம் தெரிய வேண்டாம் என நினைக்கிற போது மட்டும் ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் உபயோகிக்கலாம். அதிக வியர்வை இருந்தால் ஆன்ட்டி பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்கலாம்.

    உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பிறகு துவைத்துக் கொள்ளலாம் என மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதிலுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும். உணவுப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம்.

    பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் உதாரணம். காலங்காலமாக உடலில் தேங்கிய அந்த நாற்றத்தைப் போக்க, க்ளோரோஃபில் நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.

    பட்டைத்தூள் 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றமும் உடல் வலியும் பறந்து போகும். குளியலுக்கென்றே பாத் ஜெல், பாத் ஃபோம், சோப் கிரிஸ்டல்ஸ் என நிறைய கிடைக்கின்றன.

    நிதானமான குளியலுக்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் நாற்றமும் மறையும். அழகும் மேம்படும். வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் நனைத்த பஞ்சினை அக்குள் பகுதியில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வியர்வை நாற்றம் கட்டுப்படும். உடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகளும் காட்டனாக இருக்க வேண்டியது அவசியம்.

    0 comments:

    Post a Comment