Friday, 20 September 2013

Tagged Under: ,

கிணற்று நீரை இறைக்கும் சோலார்!

By: ram On: 17:58
  • Share The Gag

  • நான் மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். கத்திரி, வெண்டை, கீரை போன்ற பயிர்களைப் பயிரிட்டு வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை, மின்சாரத்தை நம்பியும் பயிர் செய்ய முடியாத சூழல். மின்சாரம் விட்டு விட்டு வருவதனால் தொடர்ச்சியாக நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி அழிந்தன. டீசல் மூலமாக என்ஜினை இயக்கினால் டீசல் விலை உயர்வால் முதலுக்கே மோசம் வரும் நிலை உருவானது.

     

    விவசாயத்தை மட்டுமே நம்பி நான் குடும்பத்தை நகர்த்தி வருகிறேன். எனக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. எனவே நித்தம் காவிரியையும், கரண்ட்டையும் எதிர்பார்த்துக் காத்திருந்தது போதும், வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எனது கவனம் சோலார் மின்சாரத்தை நோக்கித் திரும்பியது.



    கருகிக்கொண்டிருந்த பயிர்களைக் கண்டு வருந்தினேன். கடன் வாங்கியாவது சோலார் மின்சாரம் அமைப்பது என முடிவு செய்தேன். 2 கே.வி. அளவுள்ள சோலார் தகடுகளைப் பொருத்தி 2 ஹெச்.பி. அளவுள்ள மோட்டார் பொருத்தினேன். இந்த அளவுள்ள சோலார் தகடுகளை வைத்து 5 ஏக்கர் வரை விவசாயம் செய்யலாம். மேலும் தண்ணீர் வீணாவதைத் தடுக்க தெளிப்புநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தேன். இதன் மூலமாக தண்ணீர் மிகவும் சிக்கனமாக செலவானது.



    இப்போது நான் கத்திரி பயிரிட்டுள்ளேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடிப் போயிருந்த எனது செடிகளின் முகத்தில் இப்போதுதான் சிரிப்பைப் பார்க்க முடிகிறது. பகல் நேரங்களில் நமது ஊரில் நல்ல வெயில் அடிப்பதால் கரண்ட்டுக்கு சமமான அளவு வேகத்துடன் சோலார் மோட்டார் இயங்குகிறது. இந்த மோட்டார் அமைக்க இரண்டரை லட்ச ரூபாய் செலவானது. என்றாலும் தொடர்ச்சியாக எந்தப் பராமரிப்புச் செலவும் கிடையாது. மேலும் இந்த வகையான சோலார் மோட்டார்களை ஒருமுறை அமைக்கும்போது பின்னர்  வேறு எந்த செலவீனமோ, சிக்கலான பயன்பாட்டு முறையோ கிடையாது. என்னைப் போன்ற விவசாயிகளும் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக உள்ளது.



    இந்த ஆண்டு சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்தி, விவசாயம்செய்ததால் கத்திரி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. மேலும் கீரை, வெண்டை போன்ற பயிர்களையும் நடவு செய்துள்ளேன்.



    அரசாங்கத்தின் சார்பில் சோலார் மின்சாரத்தை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் மட்டுமே வெளிவருகிறதே ஒழிய, எனக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட 80% மானியம் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. சோலார் மின்சாரத்திற்கு செலவிட்ட இரண்டரை லட்ச ரூபாயும் வட்டிக்குதான் கடன் வாங்கி உள்ளேன்.



    நமது ஊரில் ஆண்டு முழுவதுமே சூரிய வெளிச்சம் கிடைப்பதால் அதைப் பயன்படுத்தி  விவசாயம்செய்யும்போது, விவசாயமும்  செழிப்படையும். நாட்டின் மின்சாரத் தேவையும் குறையும். அதற்கு அரசின் ஒத்துழைப்பு தேவை. சோலார் மின்சாரத்தைப் பொருத்தவரை முதன் முறையாகப் பொருத்தும் செலவு அதிகமாக உள்ளது. இது எல்லா விவசாயிகளாலும் செய்ய இயலாது. எனவே அரசு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து இதனை ஊக்குவிக்கும்போது கண்டிப்பாக இங்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி நடக்கும்" என்கிறார் செந்தில்.



    தொடர்புக்கு:99442 98638

    0 comments:

    Post a Comment