Wednesday, 21 August 2013

Tagged Under:

முல்லைப்பெரியாறு நாயகன் பென்னிகுக்!

By: ram On: 18:00
  • Share The Gag


  • தேனி மாவட்டத்தில் உள்ள பல விவசாய குடும்பங்களின் வீடுகளில் தவறாமல் ஓருவர் படம் இடம் பெற்றிருக்கும். இன்றைக்கும் அங்கு பிறக்கும் பல குழந்தைகளுக்கு அவரது பெயர்தான் வைக்கப்படுகிறது. அங்குள்ள பாலார்பட்டி, குழியனூர் போன்ற கிராமங்களில் பொங்கல் பண்டிகையைவிட, இவரது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆங்காங்கே உள்ள இவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும், வழிபாடு செய்வதும் தொடர்கிறது. விவசாயிகள் இன்றைக்கும் தங்களது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கி நன்றியோடு இப்படி பலவிதங்களில் நினைக்கும் அந்த பெரியவர் ஒரு ஆங்கிலேயர் என்றால் இன்னும் ஆச்சரியம் அதிகரிக்கும்.

    ஆம் அவர்தான் பென்னிகுக்! தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமானதும், இன்றைய தேதிக்கு கேரளா அரசால் பிரச்னை செய்யப்படும் இடமுமான முல்லை பெரியாறு அணையை கட்டியவர்தான் இவர். இங்கிலாந்தில் 1841ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம்ந்தேதி பிறந்த ஜான் பென்னிகுக், பொறியாளர் படிப்பு முடித்த கையோடு பொதுப்பணித்துறை பொறியாளராக பொறுப்பேற்று, அன்றைக்கு நம்மை ஆண்டுகொண்டு இருந்த ஆங்கில அரசால், சென்னை மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்டவர். அப்போது கடும் வறட்சியில் வாடிக்கொண்டு இருந்த தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு, ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கான முயற்சியில் இறங்கினார். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறாக உருவாகி, அந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை கண்டுபிடித்து , அந்த தண்ணீரை அணைகட்டி தடுத்து திருப்பிவிடுவதற்காக கட்டப்பட்டதுதான் முல்லை பெரியாறு அணையாகும்.
    அடர்ந்த காட்டுக்குள் அட்டை பூச்சி உள்ளிட்ட பல விஷப்பூச்சிகளின் கடி, புலி உள்ளிட்ட பல கொடிய மிருகங்களின் தாக்குதல், எப்போதும் பெய்யும் அடைமழை, மின்சாரமின்மை, உணவுப் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை சுமந்து கொண்டு உயிரை பணயம் வைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் 1887ம்ஆண்டு அணை கட்டும் முயற்சி துவங்கியது.

    அணையின் பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பெய்த பேய்மழையால், பெருகிவந்த வெள்ளத்தால் அணை அடித்து செல்லப்பட்டது. இதற்கு மேல் பணம் ஒதுக்கமுடியாது, ஆகவே அணை கட்டும் முயற்சியை கைவிட்டு திரும்ப வருமாறு ஆங்கிலேயே அரசு பென்னி குக்கிற்கு உத்திரவிட்டது.தனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்து, அணைகட்டுவதற்கு பெருந்துணையாக இருந்து, புலிகளுக்கும், கொடிய விஷப்பூச்சிகளுக்கும் உயிரைகொடுத்த, பல தமிழர்களின் கனவு திட்டமான அணை கனவாகவே போக வேண்டியதுதானா? என்று கவலைப்பட்டவர், எப்பாடு பட்டாவது அணையை கட்டியாக வேண்டும், எடுத்த முயற்சியை நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்கியவர், அணை கட்டுவதற்காக தனது சொந்த ஊருக்கு சென்று தனது சொத்துக்களை எல்லாம் விற்று கொண்டுவந்த பணத்தை போட்டு மீண்டும் அணை கட்டும் முயற்சியில் இறங்கினார்.

    இரண்டாவது முயற்சியின் போது இன்னும் பலர் இறந்தனர், பலர் நோய்வாய்ப்பட்டனர் ஆனாலும் எதற்கும் அஞ்சாமல் எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்பதற்காக பல ஆண்டுகள் போராடி அன்றைய நவீன தொழில் நுட்பத்தின்படி அணை கட்டி முடிக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2890 அடி உயரத்தில் 176 அடி உயரம், 365 மீட்டர் நீளத்தில் கம்பீரமாக கட்டி முடிக்கப்பட்ட அணையில் தண்ணீர் கடல் போல தேக்கிவைக்கப்பட்டது. பென்னிகுக் துவங்கி தென்தமிழக மக்களின் முகத்தில் ஆனந்த கண்ணீர் பெருகியது.

    அன்றைய பிரிக்கப்படாத இந்தியாவில் சென்னை மாகாணத்தை ஆண்ட ஆங்கிலேய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 வருடத்திற்கு ஒரு ஓப்பந்தம் போடப்பட்டது. வீணாகப்போகும் மழைநீருக்கு ஒரு கப்பத் தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டு அதுவும் வழங்கப்பட்டது. 999 வருடத்திற்கு இந்த அணையும், தண்ணீரும் தென்தமிழக மக்களுக்குதான் சொந்தம் என்ற அந்த ஒப்பந்தம் காரணமாக, அன்று தொடங்கி இன்று வரை கம்பம் பள்ளத்தாக்கு என்பது பசுமை வெளியாகிவிட்டது. எப்போதும் முப்போகம்தான்.உயிர்களுக்கும், பயிர்களுக்கும் தேவைப்படும் தண்ணீர் கவலையின்றி கிடைக்க பல லட்சம் மக்கள் ஆனந்தப்பட்டனர்.
    அடுத்தவர் ஆனந்தப்பட்டால் பொறுக்காத இந்த பொல்லாத உலகத்தில் கேரளா மட்டும் விதவிலக்கா என்ன? மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில், இந்த முல்லை பெரியாறு அணை கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேக்கடி பகுதிக்குள் வந்தது. அதற்கு பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல்வேறு பொய்க்காரணங்களை காட்டி அணையின் நீர்மட்டத்தை படிப்படியாக குறைத்து, இன்றைக்கு அணையே இருக்கக்கூடாது என்ற நிலையை எடுத்துள்ளது.

    இந்த அணை மட்டும் இல்லை என்றால் வானம் பார்த்து விதைத்து வாழும் தென் தமிழக விவசாய மக்களின் வாழ்க்கையை நினைத்தே பார்க்கமுடியவில்லை.தமிழர்களின் உழைப்பாலும், உதிரத்தாலும்.உயிராலும், தனக்கு ஒரு துளி லாபம் இல்லை என்ற போதிலும் மனிதநேயத்துடன் தன் சொந்த பணம் கொண்டு கட்டிய பென்னிகுக்கின் பெருங்கருணையிலும், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத பெருஞ்செல்வமாக கம்பீரமாக எழுந்து நிற்கும் முல்லைபெரியாறு அணையை இப்போது போற்றி பாதுகாக்கும் உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கு வித்திட்ட பென்னி குக்கின் பிறந்த நாளான வருகின்ற 15/01/12ம் தேதி தென்மாவட்ட மக்கள் என்று இல்லை மொத்த தமிழகமே கொண்டாடி மகிழ்ந்தாலும் சந்தோஷமே.

    0 comments:

    Post a Comment