Thursday, 15 August 2013

Tagged Under:

தனி மனித ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரம்! – முதல்வர் சுதந்திர தின உரை!

By: ram On: 13:44
  • Share The Gag

  •       ”சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம், வேலைவாய்ப்பு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சமூக, பொருளாதார காரணிகளால் ஒடுக்கப்படாமல் ஒவ்வொரு தனி மனிதருக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரத்திற்கான இலக்கணம்.” என்று முதல்வர் ஜெயலலிதா கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை ஆற்றியபோது தெரிவித்தார்.


     தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா, சென்னை கோட்டையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சாகச செயல் புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கினார். நாடு முழுவதும் 67-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா நடந்தது. இதற்காக கோட்டை கொத்தளம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


     15 - t n cm flag


    விழாவில் பங்கேற்பதற்காக காலை 8.25 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வீட்டில் இருந்து புறப்பட்டார். அவரை போலீசார் இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து அழைத்து வந்தனர். விழா மேடை அருகே வந்த முதல்வரை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்றார். அதைத்தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் தலைமை படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் டி.கே.பிள்ளை, கடற்படை பொறுப்பு அதிகாரி கமாண்டர் மகாதேவன், தாம்பரம் விமானப்படை அதிகாரி ஏர் கமோடர் எஸ்.பிரபாகரன், கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பி.ஷர்மா, தமிழக டிஜிபி ராமானுஜம், கூடுதல் டிஜிபி (சட்டம் – ஒழுங்கு) டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.



         பின்னர் பேசிய அவரது உரையின் போது,”அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தையும், சுதந்திர தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 67-வது சுதந்திர தின நன்னாளில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்ததில் பெருமிதம் அடைகிறேன். இந்த வாய்ப்பை நல்கிய தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



         சுதந்திரம் என்ற வார்த்தையே நமது மனங்களில் மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான சுதந்திரத்தைப் பெற ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழகத்திலிருந்து முதலில் குரல் கொடுத்தவர்கள் பாளையக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோரின் புரட்சி மகத்தானது. இதுவே சுதந்திரப் போராட்டத்திற்கான முதல் வித்தாக அமைந்தது.



          இந்திய அளவில், சர்தார் வல்லபாய் பட்டேல், பாலகங்காதர திலகர், அண்ணல் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என பல தலைவர்கள் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டுள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்ரமண்ய பாரதியார், திருப்பூர் குமரன், தீரர் சத்தியமூர்த்தி, சுப்ரமண்ய சிவா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அயல்நாட்டு வீராங்கனை அன்னி பெசன்ட் அம்மையார், மாவீரன் வாஞ்சிநாதன் என எண்ணற்ற தலைவர்கள் ரத்தம் சிந்தியும், உயிரைக் கொடுத்தும் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரத்தை நமக்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த விடுதலைத் திருநாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தியாகிகளுக்கும் என்னுடைய வீர வணக்கத்தினை செலுத்துகிறேன்.



    சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம், வேலைவாய்ப்பு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சமூக, பொருளாதார காரணிகளால் ஒடுக்கப்படாமல் ஒவ்வொரு தனி மனிதருக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரத்திற்கான இலக்கணம்.” என்று குறிப்பிட்டார்.

    0 comments:

    Post a Comment