Tuesday 7 October 2014

Tagged Under:

உணர்வுகள்… சில உண்மைகள்!

By: ram On: 23:00
  • Share The Gag
  • ஒரு மின்னல் தோன்றி மறைவது போலக் கோபம்… செல்லத்துக்கு! ஏன், எதற்கு என்று யோசிப்பதற்குள் மூக்கு சிவக்கும் கோபம் வெவ்வேறு  வண்ணங்களுக்கு மாறி விடும். ‘ஸாரி’ சொல்லி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்த நிமிடங்களுக்குப் பிறகுதான் அது ஆற்றுப்படும். குழந்தைகள்  எதிர்கொள்ளும் மனம் சார்ந்த அழுத்தங்கள்தான் அவர்களின் கோபத்துக்கான முக்கியக் காரணம்.

    ‘‘உணர்வுகளை வெளிப்படுத்துவது ஒரு கலை. குழந்தை பிறந்தது முதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பழக்கத்தை இயல்பாகவே கொண்டிருக்கிறது.  நம் வாழ்க்கை முறையிலோ உணர்வுகளை அடக்குவதற்கு மட்டுமே சொல்லித்தரப்படுகிறது. இந்தத் தவறான அணுகுமுறைதான் குழந்தைக்கு மன  அழுத்தச் சூழலை உருவாக்குகிறது. உணர்வுகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிப்பதன் மூலம் இது போன்ற பிரச்னைகளிலிருந்து குழந்தைகளை மீட்க  முடியும்’’ என்கிறார் உளவியல் நிபுணர் தேவிப்ரியா.

    ‘‘மனித உணர்வுகளை ‘நவரசம்’ என்கிறோம். முதன்மை நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என மூன்று வகைகளாக உணர்வுகளைப்  பிரிக்கலாம். அன்பு, மகிழ்ச்சி, கோபம், ஆச்சரியம், துக்கம், வெறுப்பு, இரக்கம், வெட்கம், நளினம் ஆகிய ஒன்பதும் இவற்றில் அடக்கம். குழந்தைகளின்  உணர்வுகளைப் புரிந்துகொள்ள கற்றுத் தருவது முதல் படி. தன் உணர்வுகளைப் புரிந்து கொண்ட குழந்தைகளுக்குத்தான் மற்றவர்களின் உணர்வுகளும்  புரியும். அவற்றைக் கையாளவும் அவர்களுக்குக் கற்றுத்தர முடியும். எமோஷனல் இன்டலிஜென்ஸ் திறன் உடையவர்களே,ஆளுமைத் திறனில் சிகரம்  தொடுவார்கள்.

    குழந்தையின் அனைத்து வெற்றிகளுக்குப் பின்னால் இருந்தும் ஆட்சி புரியப் போவது இந்த உணர்வுகளே.  காலம் காலமாக நம் வாழ்க்கை முறையில்  தவறான நம்பிக்கைகளும் நடைமுறைகளும் புகுத்தப்பட்டிருக்கின்றன.

    உதாரணமாக…

    ‘வெட்கம் பெண்களுக்கு மட்டுமே சொந்தமானது… ஆண் அழக்கூடாது… பெண் எவ்வளவு வேண்டுமானாலும் அழலாம்’ என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் தவறானது. அழுகை இருவருக்கும் பொதுவானது. இயலாமை, கோபம், ஏமாற்றம் போன்ற சந்தர்ப்பங்களில் அழுகை  ஒரு வடிகால். அது தடுக்கப்படும் போது அந்த உணர்வு மனதில் படிந்து, அழுத்தத்தை உருவாக்குகிறது. ஆணின் அழுகை தடுக்கப்படும்போது அது  வேறு ஓர் இடத்தில் தாக்கத்தை உருவாக்குகிறது.

    உணர்வுகளைப் பற்றிய புரிதல், கையாளுதலைப் பற்றி பலர் எந்தக் கவலையும் படுவதில்லை. அதனால்தான் ஆறாம் வகுப்புக் குழந்தை  தற்கொலைக்கு முயற்சிக்கிறது. அடிப்பது, உடைப்பது, இழிவுபடுத்துவது, அடம் பிடிப்பது, திருடுவது, தனக்குப் பிடித்ததை மட்டுமே செய்வது,  மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் நடப்பது ஆகியவற்றுக்கு இதுவே காரணம். குழந்தை, மற்றவர்களின் உணர்வுகளை சமாளிக்கப்  பழகும்போது, தன் முனைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் அளவு உயரும். வெற்றியை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக்  கொண்டு அடுத்த அடிகளை முன் வைக்கும்.

    மேலைநாடுகளில் உணர்வுகளைப் பற்றிய பாடம் பள்ளியிலேயே கற்பிக்கப்படுகிறது. 6 வயதில் இருந்தே குழந்தைக்கு தன் உணர்வு களைப் பற்றியும்  அவற்றைக் கையாளவும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. உணர்வுகள் தனியாக மட்டும் அல்ல… இணைந்தும் வெளிப்படும். எதிர்பார்த்த  ஒரு விஷயம் நடக்காமல் போகும் போது எதிர்பார்ப்பு மற்றும் வருத்தம் ஆகிய இரு உணர்வுகளை மனம் கடக்கிறது. மற்றவர்களை தன் நிலையில்  வைத்து சிந்திக்கும் பக்குவத்தை எட்டிவிட்டால் எந்த இழப்பும் குழந்தையை பெரிய அளவில் பாதிக்காது. எதிர்பாராமல் சந்திக்கும் சிக்கல்களை  நினைத்து தன்னை வருத்திக் கொள்ளாது. பிரச்னைகளை சமாளிக்கும் திறன் மேம்படும். மனதை தெளிவாக அணுகுவதன் மூலம் புதிய விஷயங்களை  ஏற்றுக் கொள்வது, சிந்தனைக்கான தேடலை உருவாக்குவது என மகிழ்ச்சியாக வாழ்வை திட்டமிடத் தயாராகிவிடும்.

    குழந்தை ஒரு விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்கிறது என்பதில்தான் வாழ்க்கையே அர்த்தப்படுகிறது. ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பு என்று பயப்படும்  குழந்தைகளையும் பார்க்கிறோம். ‘பர்சப்சன்’ இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புரிதலற்ற உணர்வுகளே எதிர்மறை எண்ணங்களுக்கும் செயல்களுக்கும்  வழிவகுக்கும். உணர்வு சார்ந்த பிரச்னைகளை மற்றவர்களது வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து புரிய வைக்கலாம். குழந்தை சந்திக்கும் பல்வேறு  அனுபவங்களை எடுத்துக்காட்டாக முன் நிறுத்தும்போது புரிதல் எளிதாகும். உணர்வுகள் குறித்த புரிதலை உருவாக்க ‘எமோஷனல் லேடர்’ ஒன்றை  வடிவமைத்திருக்கிறோம்.

    உணர்வுகள் சார்ந்து வெளிப்படும் நிகழ்வுகளை விளையாட்டுப் போல குழந்தைக்குப் புரிய வைப்பதே எமோஷனல் லேடரின் நோக்கம். அது போல  ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். நடிப்பு, விளையாட்டு மூலமாகவும் உணர்வுகளின் தாக்கத்தை கற்பிக்க முடியும். ‘சொன்னதைக் கேட்க வேண்டும்,  படிக்க வேண்டும், நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும்’ என்பதையே பெற்றோர் குழந்தையிடம் எதிர் பார்க்கிறார்கள்.  குழந்தைக்கோ தன்  சந்தோஷத்தை, தன்தேவையை வெளிப்படுத்த இந்த எதிர்பார்ப்புகளுக்குள் எந்த வாய்ப்பும் இல்லை.  குழந்தை, தனக்கான சந்தோஷங்களைத் தேடி பெற்றோர் போட்டு வைத்திருக்கும் எல்லைக்கோடு களைத் தாண்ட ஆரம்பிக்கும் போது அலர்ட் ஆகிறார்கள் பெற்றோர். ஒரு மதிப்பெண் குறைந்தாலும்  என்னமோ ஏதோ என பயந்து போய், பாடம் புகட்டத் தொடங்குகிறார்கள்.

    தான் நினைத்த எதுவுமே நடக்காத போதும், தன் உணர்வுகளை யாருமே புரிந்து கொள்வதில்லை என்ற முடிவுக்கு வரும் போதும் குழந்தை,  எதிர்மறையான நடவடிக்கைகளை தனக்கான ஆயுதமாக எடுக்கிறது. மழை, வானவில், புயல், வேகக் காற்று, வெயில் என பல்வேறு அழகுகள்  உணர்ச்சி வடிவத்தில் அந்த மொட்டுக்குள் பதுங்கியிருக்கின்றன. எந்தச் சூழலில் எது வெளியில் வரும். வந்தால் எப்படி எதிர்கொள்வது, கடந்து  செல்வது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் குழந்தைப் பருவம் மட்டுமல்ல… வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும்  சந்தோஷம் எனும் தேனில் நனைத்து சுவைத்தபடியே பயணம் செய்யலாம். இதைத்தான் ஒவ்வொரு குழந்தையும் நம்மிடம் எதிர்பார்க்கிறது’’

    0 comments:

    Post a Comment