Thursday 9 October 2014

Tagged Under:

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி

By: ram On: 19:56
  • Share The Gag
  • நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.

    ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.

    நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.

    அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

    இரண்டாவது மோசடி:

    சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.

    916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.

    மூன்றாவது மோசடி:

    தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது. ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் தயார் செய்வதற்கான கூலியாகும். ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.

    ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு *சேதாரம்* என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.

    அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர். அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.

    நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது.
    நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது.  துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.  இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.

    அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான்.  ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.

    இதற்கெல்லாம் ஒரே தீர்வு தங்கத்தின் மீது வைத்துள்ள மோகத்தை குறைப்பதுதான். படித்த நம்மிலிருந்து ஆரம்பிக்கட்டும்.

    3 comments:

    1. முக்கியமான அவசியமான பதிவு. நன்றி

      ReplyDelete
    2. மக்கள் உணரவேண்டும். நல்ல பதிவு

      ReplyDelete
    3. yes you are perfectly correct. good post ,even though we know the subject already, we didn't recorded it as a post. You did it. well done.keep it up

      ReplyDelete