Saturday 2 August 2014

Tagged Under: , ,

திருப்தி தராத படைப்பாகவே இருக்கிறது இந்த ஜிகர்தண்டா - திரைவிமர்சனம்...!

By: ram On: 07:51
  • Share The Gag

  • யாருமே தொடாத களத்தில் இறங்கி அடிப்பது ஒருவகை. சரியாக தொட்டாலும் இறங்கி அடிக்காமல் விட்டதை தேடிப்பிடித்து செம காட்டு காட்டுவது ஒரு வகை. அதில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இரண்டாம் ரகம். திகில் படங்களின் வருகை குறைந்த நேரத்தில் கதி கலங்க அடித்தது பீட்சா. பருத்திவீரனை தொடர்ந்து நம்மையெல்லாம் அடித்து ஓய்ந்து போன மதுரைவாழ் ரவுடி (கதை)யை தட்டி எழுப்ப வந்திருக்கிறது ஜிகர்தண்டா. தமிழ் சினிமாவிற்கு பெரிதும் பரிச்சயம் இல்லாத ‘ம்யூசிக்கல் கேங்க்ஸ்டர்’ வகை கதையுடன் பாண்டிய நாட்டில் வலம் வந்திருக்கிறார் இந்த பீட்சா பாய்.

     குறும்படம் எடுக்கும் கார்த்திக்கிற்கு சினிமா எடுக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. ரத்தம் தெறிக்க நாயகன், தளபதி மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது தயாரிப்பாளர் போடும் உத்தரவு. எனவே மதுரையில் இருக்கும் நண்பன் வீட்டில் தங்கி அங்கிருக்கும் பிரபல தாதா சேதுவின் வாழ்க்கை கதையை படமாக்க முனைகிறான் அவன். ஆனால் சேதுவை துப்பறியும் சாகசத்தில் வசமாக சிக்கிக்கொள்கிறான் கார்த்திக். சேதுவிற்கும், கார்த்திக்கிற்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் இந்த ஜிகர்தண்டா.

     சாக்லேட் பாய் இமேஜை தாண்டி சினிமாவில் தனது பெயரை நிலைநாட்ட சித்தார்த் இன்னும் முயற்சித்துக்கொண்டேதான் இருக்கிறார். இந்த படமாவது அவருக்குள் இருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்புமா என்று பார்த்தால் சற்றே குறுகுறுவென்று பார்த்துவிட்டு மீண்டும் சொப்பனத்தில் ஆழ்ந்துவிடுகிறது. முதல் படம் எடுக்க போராடும் இளம் இயக்குனர் கதாபாத்திரம் என்னவே இவருக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அழுத்தமான நடிப்பு எட்டாக்கனியாகவே இருப்பது பரிதாபத்தை மட்டுமே வரவழைக்கிறது.

    பெயருக்குத்தான் சித்தார்த் ஹீரோ. மற்றபடி சிம்ஹாதான் கதையின் மையப்புள்ளி. தனது ஆத்ம நண்பனுக்கு மிகப்பெரிய வாய்ப்பை பரிசளித்து உள்ளார். இயக்குனர். ஆனால் இந்த அதிகப்படியான பளுவை தாங்க இயலாமல் ஆங்காங்கே திணறி இருக்கிறார் சிம்ஹா. என்னதான் கெத்து கெட்டப்பை வெளிப்படுத்த முயன்றாலும் அந்த பிஞ்சு முகத்தில் தென்படும் உணர்ச்சி நம்மை சில சமயம் பயமுறுத்தாமல் பின் வாங்கிவிடுகிறது. லட்சுமி மேனன் – சித்தார்த் கெமிஸ்ட்ரி….சுத்தம்.

    சித்தார்த் நண்பனாக கருணாகரன். சூது கவ்வும் அளவிற்கு ரிப்பீட் அடிக்க முடியாவிட்டாலும் பயம் கலந்த பார்வை பார்த்தே பல இடங்களில் ஒப்பேற்றி விடுகிறார். ரத்தம் தெறிக்கும் கனவில் கருணா ராக்ஸ். சிம்ஹா & கோவி நடிப்பு பயிற்சி எடுக்கும் காட்சிகள் காமடி கலாட்டா. ‘நீ என்ன விர்ஜின் ரவுடியா?’, ‘நடுவீட்ல கொலை பண்ணிட்டு சிரிப்பொலி பாக்கறீங்களா?’ போன்ற சில ஒற்றை வரி வசனங்கள் சிரிப்பு பட்டாசு.

    சங்கிலி முருகன் கொஞ்சமே வந்தாலும் நிறைவான நடிப்பு. ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், அம்பிகா என பரிச்சயமான முகங்கள் தென்பட்டாலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் தரப்படவில்லை. கௌரவ வேடத்தில் விஜய சேதுபதி. வெறும் நட்புக்காக மட்டுமே. சிலாகிக்க ஒன்றுமில்லை.

     ஆரியின் கேமரா ஜாலம் வெகு சிறப்பு. இசைப்பின்னணி அதிகம் கொண்ட படமென்பதால் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசைக்கு சவால்கள் அதிகம். அபாரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் திருப்தியாக இருக்கிறது. அதே சமயம் இருவரிடமும் உலக சினிமாக்களின் பாதிப்பு அநியாயத்திற்கு அதிகம்.  ‘பாண்டி நாட்டு’, ‘கண்ணம்மா’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

    துவக்கத்தில் சற்று மெதுவாக நகரும் கதை இடைவேளைக்கு முந்தைய காட்சியில் படபடப்பை கூட்டுகிறது. அதன் பிறகு காமடி, விறுவிறுப்பு என கலந்து கட்டி அடிக்கிறார் இயக்குனர். ஆனால் இப்படியே ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைப்பதால் பக்காவாக படத்தை முடிப்பது சாத்தியமா எனும் சந்தேகம் எழும்போது ‘சத்தியமாக சாத்தியமே இல்லை’ என நிரூபிக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். இரண்டே கால் மணி நேரத்தில் நச்சென்று முடிக்காமல் மேலும் அரை மணிநேரம் இழுத்ததோடு அரை டஜன் மினி க்ளைமாக்ஸ்களை வைத்து சொதப்பி இருப்பது பெரிய மைனஸ்.

    முன்பு சொன்னது போல காமடி கலந்த கேங்க்ஸ்டர் கதையை இசைப்பின்னணியுடன் தமிழக ரசிகர்களுக்கு சொல்ல அசாத்திய தைரியம் வேண்டும். அந்த முயற்சிக்காக இயக்குனரை பாராட்டலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் திருப்தி தராத படைப்பாகவே இருக்கிறது இந்த ஜிகர்தண்டா.

    0 comments:

    Post a Comment