Wednesday 8 October 2014

Tagged Under: ,

தொடரும் 'பாட்ஷா' மேஜிக்: சுரேஷ் கிருஷ்ணா மகிழ்ச்சி

By: ram On: 01:08
  • Share The Gag
  •  ரஜினி படங்களின் வரிசையில், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் 'பாட்ஷா'. சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்த படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்து இருந்தார். 1995ம் ஆண்டு இப்படம் வெளியானது.

    சமூகவலைத்தளங்களின் தாக்கம் இல்லாத காலகட்டத்தில் வெளியான இப்படம், பலமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. கடந்த ஞாயிற்றுகிழமை (அக்.5) சன் டி.வியில் ஒளிபரப்பப்பட்டது.

    ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் பலரும் 'பாட்ஷா' படத்தைப் பற்றி தங்களது கருத்துக்களை பகிர ஆரம்பித்தார்கள். இதனால் ட்விட்டர் தளத்தில் முதலில் சென்னை அளவில் ட்ரெண்ட் ஆன #Baasha என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் வர ஆரம்பித்தது.

    இது குறித்து 'பாட்ஷா' இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்ட போது, "1995ல் வெளியான படம். இதற்கு 19 வருடங்கள் கழித்தும், 2014ல் ரசிக்கிறார்கள் என்றால் அது படத்தோட மேஜிக் என்று தான் சொல்வேன். படம் வெளியான காலத்தில் இருந்த இளைஞர்களுக்கு இப்போது 20 வயது கூடியிருக்கும். அவர்களும் சரி, தற்போதுள்ள இளைஞர்கள், சிறு குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ரசிப்பது சந்தோஷமாக இருக்கிறது. இந்திய திரையுலகில் 'ஷோலே', 'பாட்ஷா' போன்ற சில படங்களுக்கு தான் இந்த மேஜிக் இருக்கிறது.

    'பாட்ஷா' படத்தின் திரைக்கதை தான் மிகவும் பலம். அத்திரைக்கதையைப் பின்பற்றி தமிழ், தெலுங்கில் பல்வேறு படங்கள் வந்திருக்கின்றன. இருந்தாலும் 'பாட்ஷா' அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இன்னொரு முறை 'பாட்ஷா' ரீமேக் எல்லாம் சாத்தியமே இல்லை. இப்பவும் அப்படம் தொலைக்காட்சியில் போடும் போது எல்லாம் எனக்கு நிறையப் பேர் போன் செய்து பாராட்டுகிறார்கள்.

    'பாட்ஷா 2' பண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை. என்னைப் பொறுத்தவரை 'பாட்ஷா' படத்தை அப்படியே விட்டுவிடுவது தான் நல்லது. அதை தான் ரஜினியும் விரும்புவார்" என்று கூறினார்.

    0 comments:

    Post a Comment