Wednesday 8 October 2014

Tagged Under: ,

காற்றில் கரைந்த பாலு மகேந்திராவின் கனவுப் பட்டறை!

By: ram On: 08:30
  • Share The Gag
  • இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குனர் பாலுமகேந்திரா. தமிழ் நாட்டிற்கு கிடைத்த சத்யஜித்ரே. தன் ஒப்பற்ற திறனால் திரையில் அடர் இருட்டைக் கூட அழகுபட காண்பித்த ஒளி ஒவியர்..சக மனிதர்களை மட்டுமல்ல,

    காற்றில் கரைந்த பாலு மகேந்திராவின் கனவுப் பட்டறை!

    அஃறிணைகளிடமும் அளவில்லாத பாசத்தை வைத்திருந்த மனிதன்.

    ஒரு முறை நாம் அவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது குறும்படங்கள் குறித்து பேச்சு எழுந்தது. பரபரப்பான இயக்குனராக இருந்தபோதும் குறும் படங்கள் எடுப்பதை பாலுமகேந்திரா எப்போதும் கைவிட்டதில்லை. இது பற்றி அவரிடம் கேட்டபோது, 'குறும்படங்கள் எடுப்பது ஒரு சுகானுபவம்,' என்றார். நாம் அவர் எப்போதோ எடுத்த ஒரு குறும்படத்தைப் பற்றி நினைவு படுத்தியதும், அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் அந்த படம் எடுத்து பல ஆண்டுகளாகி விட்டது. வார இதழ் ஒன்றில் ஒரு பக்க கதையாக வந்திருந்தது. அது ஏற்படுத்திய பாதிப்பால் அந்த கதையை படமாக்கியிருந்தார் பாலு சார்.

    'அந்த கதையை எழுதியவர் பெயர் எனக்கு மறந்து விட்டது . உங்களுக்கு நினைவிருக்கா,' என்றார்.

    'இருக்கு சார் சூரியசந்திரன்,' என்றதும்,

    'ஆமாம்ப்பா. அவரை கண்டுபிடிக்க முடியுமா,' என்று குழந்தைபோல் கெஞ்சினார்.

    காற்றில் கரைந்த பாலு மகேந்திராவின் கனவுப் பட்டறை!

    காரணம் அந்த கதையின் மேல் அவர் வைத்திருந்த காதல். கண்ணுக்குத் தெரியாத ஒரு அறிமுக எழுத்தாளர் எழுதிய படைப்புதானே என்று அலட்சியப்படுத்தாமல் அந்த படைப்பை மதித்து அவரை சந்திக்க துடிக்கும் அந்த படைப்புள்ளம் யாருக்கு வரும்?அவர் உதவியாளர்கள் என்று சொல்லிக்கொண்டு உயர்ந்த இடத்தில் இருக்கும் இயக்குனர்களுக்குக் கூட வராது.

    பாலு சாரை கிறங்கடித்த அந்தக் கதை இதுதான். ஊரில் பெரிய நிலசுவான்தாராக இருக்கும் ஒரு பெரியவர் தெரு நாய் ஒன்றை குட்டியிலிருந்தே வளர்த்து வருவார். அவர் வீட்டில் யாரும் அவரை மதிப்பதில்லை. இந்த நாய்தான் அவருக்கு துணை. குட்டிநாய் வளர்ந்து பெரிதாகிவிடும். திடீரென்று ஒரு நாள் அந்த பெரியவர் இறந்துவிடுவார்.

    பெரும் சொத்து வைத்திருப்பவர் என்பதால் சொந்தங்கள் திரண்டு வந்தது. பெரியவர் உடலை நாற்காலியில் வைத்து அழும். அப்போது ஒரு புகைப்படக்காரர் பெரியவரைச் சுற்றியழும் கூட்டத்தை போட்டோ எடுப்பார். அங்கு அழுதுகொண்டிருந்த அத்தனைபேரும் உடனே முகத்தை துடைத்து, தலையை சரிசெய்து போட்டோவிற்கு போஸ் கொடுப்பார்கள். ஆனால் அந்த பெரியவர் வளர்த்த நாய் மட்டும் 'நம்ம ஃப்ரண்டுக்கு என்னாச்சு' என்கிற மாதிரி உயிரற்ற அவரின் உடலை வெறித்துப் பார்த்தபடி நிற்கும். இதுதான் அந்த கதை. இதை கண்கள் குளமாகும் வகையில் உயிரோட்டமாகப் படம் பிடித்திருப்பார் பாலு மகேந்திரா.

    ஒரு படைப்பிற்கு மரியாதை செய்யும் அந்த பேரன்பும் பெருங்கருணையும் பாலுமகேந்திராவிற்கு மட்டுமே உண்டு. அவரோடு பேசி முடித்து கிளம்பும் போது, 'இருங்கள் என் பிள்ளைகளை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்,' என்று மாடிக்கு அழைத்துப்போனார். நமக்கு யாராக இருக்கும் என்று சர்ப்பரைஸ்.. போனால், மாடி முழுதும் வண்ண வண்ண பூக்களோடு செடிகள் நிறைய இருந்தன. ஒவ்வொரு செடியாக எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘இவன் பேரு வித்தியாசமானது. இவன் என்ன செய்வான் தெரியுமா இலைகளையே பூக்களோட நிறத்துல முளைக்க வைப்பான். மூணு மாசம் இலைகளை உதிர்த்து விட்டு நிற்பான். அப்புறம் தழைப்பான்,' என்று நிஜக் குழந்தைகளை போல வாஞ்சையோடு செடிகளை வருடிக் கொடுத்துக் கொண்டே சொன்னார்..

    இந்த நேரத்தில் தான் ஒரு தலைசிறந்த கேமராமேன், இயக்குனர் என்ற எந்த கிரீடமும் அவர் தலையில் இருந்ததில்லை. இந்த எளிமையை பல்வேறு தருணங்களில் அவரிடம் காணலாம்.

    ஒரு இயக்குனருக்கு படம் எடுப்பது மட்டுமே வேலையில்லை. அவன் இலக்கிய உலகத்தினரோடும், சாமான்ய மக்களோடும் இணைந்திருக்கவும் வேண்டும் என்ற பண்பு அவரிடம் இருந்தது.

    தமிழ் சினிமா வரலாற்றில் மற்ற மொழிக்காரர்களிடம் நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடியத் திரைப்படமான ‘வீடு' படத்தில் ஒரு காட்சி வரும். தன் பேத்தி கஷ்டப்பட்டுக் கட்டிக் கொண்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட வருவார் சொக்கலிங்க பாகவதர். செருப்பைக் கழட்டிப் போட்டு, வலது காலை எடுத்து வைத்து மாடிப்படி ஏறிச் செல்வார். இன்னும் பூசி முடிக்கப்படாத செங்கற்சுவரினை தன் தளர்ந்த கைகளினால் தடவிப் பார்ப்பார். கண்களில் கசியும் மகிழ்ச்சியை, அவரது பொக்கை வாய்ச் சிரிப்பு நமக்குக் காட்டும்.

    கூடவே இளையராஜாவின் ‘ஹவ் டு நேம் இட்' நம்மை அந்தக் கட்டடத்துக்குள் கொண்டு செல்லும். ‘வீடு' படத்தைப் பார்த்த ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனுக்கும் இந்தக் காட்சி மறக்க முடியாத ஒன்று. கட்டி முடிக்கப்படாத அந்தக் கட்டடம்தான் ஒப்பற்ற கலைஞர் பாலுமகேந்திராவின் கனவுப் பட்டறையான ‘சினிமாப் பட்டறை' என்பது எல்லோருக்கும் தெரியாத செய்தி.

    பாலுமகேந்திரா தனது இறுதிக் காலங்களில் பெரும்பகுதியை தனது சினிமாப் பட்டறையிலேயே கழித்தார். சினிமாவை ஒருபோதும் தொழிலாகக் கருதாத அந்த கலைஞருக்கு அவரது சினிமாப் பட்டறைதான் உயிர்மூச்சு. அதனால்தான் அவரது உயிர் பிரிந்தவுடன் அவரது உடல் சினிமாப் பட்டறையிலேயே பொது மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அவர் காலமானவுடன் அவரது கனவு கலைந்து விடாத வண்ணம், சினிமாப் பட்டறையில் வகுப்புகள் நடந்து கொண்டுதானிருந்தன. பாலுமகேந்திரா என்னும் கலைஞர் உயிரோடு அந்தப் பட்டறையில் உலவிக் கொண்டிருந்தார்.

    இப்போது அந்த கனவுப் பட்டறை மூடப்பட்டு விட்டது. கட்டடத்தின் முகப்பில் பாலு மகேதிராவின் கையெழுத்திலேயே பொறிக்கப்பட்டிருந்த ‘பாலு மகேந்திரா சினிமாப் பட்டறை' என்னும் எழுத்துகள் காணாமல் போய்விட்டன. ‘வீடு' திரைப்படத்தில் பெரியவர் சொக்கலிங்க பாகவதர் ஆசையுடன் தடவித் தடவிப் பார்த்து மகிழ்ந்த அந்தக் காட்சியை இப்போது பார்க்கும் போது, அது சொக்கலிங்க பாகவதர் அல்ல, பாலு மகேந்திரா என்பது நமக்குப் புரிய வருகிறது.

    கடைசி வரைக்கும் கதையும் கருணையுமாக வாழ்ந்து விட்டுப் போன பாலு சாரை இப்போது நினைத்தாலும் மனம் கலங்குகிறது. யாரோ முகம் தெரியாத ஒரு எழுத்தாளனைப் பார்க்க, இந்திய சினிமாவின் முகமாக இருந்த ஒரு இயக்குனர் ஆசைப்படுகிறார் என்றால் அந்த எளிமையை என்னவென்று சொல்வது. அவர் வாழ்ந்த காலத்தில் 'அப்பா அப்பா' என்று வெறும் வாய் ஜாலத்திலேயே வலம் வந்த பிள்ளைகளுக்குப் புரியுமா அப்பாவின் ஆன்மாபடும் வலி?

    0 comments:

    Post a Comment