Friday 10 October 2014

Tagged Under: , ,

‘வெண்நிலா வீடு’ அழகான குடும்பம் - திரைவிமர்சனம்..!

By: ram On: 18:46
  • Share The Gag
  • கார்த்திக் (செந்தில்குமார்) ஒரு லேத் பட்டறையில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி (விஜயலட்சுமி) தனது மாமா கார்த்திக்கை காதலித்து கரம்பிடித்தவள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் வெண்ணிலா.

    அளவான குடும்பம், அமைதியான வாழ்க்கை என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இவர்களது வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு குடிவருகிறாள் இளவரசி.

    பெரிய செல்வந்தரின் மகளான இளவரசிக்கு திருமணம் ஆகியும் நீண்ட நாளாக குழந்தை இல்லாததால், தனிக்குடித்தனம் வைத்தால் குழந்தை பேறு உண்டாகும் என ஜோசியர் சொன்னதால் இந்த வீட்டில் குடியமர்த்துகிறார் அவளது அப்பா மோகன்வேலு(முத்துராமன்).

    அந்த வீட்டுக்கு குடிவந்ததில் இருந்து தேன்மொழிக்கும், இளவரசிக்கும் மோதல் இருந்து வருகிறது. இளவரசி செய்யும் அடாவடித்தனங்கள் தேன்மொழிக்கு அவள் மீது வெறுப்பை உருவாக்குகிறது.

    ஆனால், இளவரசியோ தேன்மொழியின் குணநலன்களை புரிந்துகொண்டு, அவளிடம் நட்பு வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஒருநாள் தேன்மொழிக்கு அநாவசியமாக போன் பேசி தொந்தரவு செய்யும் நபரை இளவரசி கண்டறிந்து அவனை தண்டிக்கிறாள். இதனால், தேன்மொழிக்கு இளவரசி மீது நல்ல மரியாதை உண்டாகிறது. இருவரும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள்.

    இந்நிலையில், செந்தில்குமார் முதலாளியின் மகளுக்கு திருமணம் வருகிறது. அவளது திருமணத்திற்கு குடும்பத்தோடு வரவேண்டும் என்று செந்தில்குமாருக்கு அழைப்பு வருகிறது. தன்னிடம் நகைகள் இல்லாதால் இளவரசியிடம் விலை உயர்ந்த நகை ஒன்றை இரவல் வாங்கி போட்டுக் கொண்டு கல்யாணத்துக்கு போகிறார் தேன்மொழி.

    கல்யாணத்துக்கு போய்விட்டு திரும்பி காரில் வரும் வேளையில் தேன்மொழியின் செல்போனை ஒருவர் எடுத்து வைத்திருப்பதாகவும், தானே நேரில் வந்து ஒப்படைப்பதாகவும் கார்த்திக்கின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வருகிறது.

    அதன்படி, நேரில் வந்து கொடுக்க வரும் அந்த நபர் திட்டம் போட்டு தேன்மொழியின் கழுத்தில் கிடக்கும் நகையை திருட பார்க்கிறார். செல்போனை கொடுக்க வந்த நபர் நடுவழியில் நின்றுகொண்டிருக்கும் கார்த்திக்கை தனியாக அழைத்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில், பைக்கில் வரும் மற்றொரு நபர் தேன்மொழியின் கழுத்தில் கிடந்த நகையை பிடுங்கிக் கொண்டு சென்றுவிடுகிறார்.

    அவனை பிடிக்க கார்த்திக் முயல்கிறார். ஆனால், அது முடியாமல் போகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப் போய் நிற்கிறார்கள்.

    நகை தொலைந்து போனதால் தேன்மொழி-இளவரசி நட்பு என்ன ஆயிற்று? இந்த நகையால் கார்த்திக்-தேன்மொழியின் வாழ்க்கை என்ன நிலைமைக்கு ஆளானது? என்பதை வெள்ளித்திரையில் காண்க.

    கார்த்திக் கதாபாத்திரத்தில் வரும் செந்தில்குமார், நடுத்தர வர்க்க குடும்பத்து கணவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தனது மனைவியுடன் கொஞ்சிக் குலாவும் காட்சிகளில் நடிப்பில் யதார்த்தம் காட்டியிருக்கிறார். இறுதிக் காட்சியில் இவரது நடிப்பு பலே.

    விஜயலட்சுமி, அழகான குடும்ப பெண்ணாக மனதில் இடம் பிடிக்கிறார். நடிப்பும் அபாரம். கணவனிடம் செல்லமாக பேசும் இவரது பேச்சு நம்மை வெகுவாக ரசிக்க வைக்கிறது. நமது மனைவியும் இவளைப்போல் இருப்பாளா? என எல்லோரையும் ஏங்க வைத்திருக்கிறார்.

    இளவரசியாக வரும் சிருந்தா ஆசாப், வில்லத்தனம் கலந்த நடிப்பில் அசத்துகிறார். அடாவடி பெண்ணாக நடித்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதே நேரத்தில், விஜயலட்சுமியிடம் காட்டும் பாசத்திலும் நெஞ்சை தொடுகிறார்.

    இளவரசியின் அப்பாவாக வரும் முத்துராமன் வில்லன் வேடத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். ஆக்ரோஷமான பேச்சால் அனைவரையும் நடுநடுங்க வைக்கிறார். பிளாக் பாண்டி, டாடி எனக்கு ஒரு டவுட் குரூப் சரவணன், செந்தில் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    தங்கத்தை மையமாக வைத்து அழகான குடும்ப சித்திரமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். ஒரு குடும்ப பின்னணியில் தங்கத்தின் மீதான மக்களின் மோகத்தை இவ்வளவு அழகாகவும் எடுத்துச் சொல்ல முடியும் என்று நிரூபித்திருக்கிறார். அதே நேரத்தில் எல்லோரும் ரசிக்கும்படியாகவும் சொல்லியிருப்பது பலே.

    படத்தின் கதாபாத்திரங்கள் தேர்விலிருந்து, அனைத்து தொழில்நுட்பங்களையும் கவனமாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். தன்ராஜ் மாணிக்கம் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் வெகுவாக கவர்கிறது. கண்ணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘வெண்நிலா வீடு’ அழகான குடும்பம்

    0 comments:

    Post a Comment