Tuesday 14 October 2014

Tagged Under:

தேயிலைகளில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகள்: எச்சரிக்கும் கிரீன்பீஸ் இந்தியா!

By: ram On: 19:39
  • Share The Gag
  • இந்தியாவின் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்து நச்சுகள் இருப்பதாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக இயங்கும் அரசு சாரா நிறுவனமான  ‘கிரீன்பீஸ் இந்தியா’ எச்சரித்துள்ள நிலையில், இந்திய தேயிலை வாரியம் இது தொடர்பான ஆய்வறிக்கையை ஏற்க மறுத்துள்ளது.

    இது தொடர்பாக கிரீன்பீஸ் இந்தியா ( Greenpeace India ) அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் (  World Health Organization – WHO)  அனுமதித்துள்ள அளவைக் காட்டிலும் அபாயகரமான அளவில், இந்தியாவில் விற்கப்படும் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதாக கூறியுள்ளது. மேலும் தேயிலை செடிகளில் அடிக்க அனுமதிக்கப்படாத பூச்சிக்கொல்லி மருந்துகளும் இதில் காணப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

    கடந்த 2013 ஜுன் மாதம் முதல் 2014 மே மாதம் வரை இந்திய சந்தையில் அதிகமான விற்கப்படும் 49 பிராண்டுகளின் தேயிலை மாதிரிகளும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இந்தியாவின் 11 முன்னணி நிறுவனங்களின் ( இந்த நிறுவனங்கள் ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேடு மற்றும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் தங்கள் தயாரிப்பு தேயிலைகளை ஏற்றுமதி செய்கின்றன) தேயிலை மாதிரிகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட Hindustan Unilever, Tata Global Beverages, Wagh Bakri, Goodricke Tea, Twinings, Golden Tips, Kho-Cha and Girnar  உள்ளிட்ட பல்வேறு பிரபலமான நிறுவனங்களின் தேயிலை மாதிரிகளில் மிக அதிக அபாயகரமான மற்றும் மிதமான அளவுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சு காணப்பட்டது.

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேயிலை மாதிரிகளில் ஒருகுறிப்பிட்ட பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு மட்டும் அல்லாது பலதரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சுகள் காணப்பட்டுள்ளன. மேலும் கடந்த 1989 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் பயிர்களுக்கு அடிக்க தடை செய்யப்பட்ட  DDT  என்ற பூச்சிக்கொல்லி மருந்து, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 67 சதவீத மாதிரிகளில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது என கிரீன்பீஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

    இது தவிர மனிதர்கள் மற்றும் பறவைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ‘Monocrotophos’ என்ற பூச்சிக்கொல்லி மருந்துகளும் இத்தேயிலை மாதிரிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

    பீகாரில் கடந்த ஆண்டு, பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை அந்த அறிக்கையில் நினைவூட்டியுள்ள கிரீன்பீஸ் இந்தியா, அந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் மேற்கூறிய ‘Monocrotophos’ பூச்சிமருந்து கலந்ததாலேயே அவர்கள் உயிரிழந்ததாகவும், இதனைத் தொடர்ந்து வளரும் நாடுகள் இந்த ‘Monocrotophos’  பூச்சிமருந்தை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ( Food and Agriculture Organization of the United Nations) வேண்டுகோள் விடுத்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

    இந்நிலையில் தேயிலை உற்பத்தி துறை பூச்சிக்கொல்லி மருந்து பொறியில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், அதிலிருந்து விடுபட்டு இயற்கை மற்றும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையிலான விவசாய முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், தேயிலை நிறுவனங்கள் இந்த மாற்றத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள கிரீன்பீஸ், ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முன்னணி தேயிலை நிறுவனங்களுடன் தங்களது அறிக்கையின் நகலை பகிர்ந்ந்துகொண்டதாகவும், இது தொடர்பாக அவர்களுடன் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    ‘இந்திய தேயிலை வாரியம்’  மறுப்பு

    இதனிடையே கிரீன்பீஸ் இந்தியாவின் இந்த ஆய்வறிக்கையை ஏற்க,  மத்திய வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இந்திய தேயிலை வாரியம்’ மறுத்துள்ளது.

    கிரீன்பீஸ் இந்தியா அமைப்பு மேற்கொண்ட தேயிலை மாதிரி சோதனைகள்,  நுகர்வோர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்திய சட்ட மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டவை என்றும், இந்திய தேயிலைகள் கடுமையான தரங்களுக்கு உட்படுத்தப்பட்டவை என்றும், முற்றிலும் பாதுகாப்பானது என்றும், உலகம் முழுவதும் இந்திய தேயிலை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும், எனவே இந்திய தேயிலைகள் குறித்து தவறான புரிதல் கூடாது என்றும் அது கூறியுள்ளது.

    0 comments:

    Post a Comment