Tuesday 23 September 2014

Tagged Under:

அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை!

By: ram On: 23:02
  • Share The Gag
  • ஷெர்லாக் ஹோம்ஸ் பற்றிப் பலரும் அறிவோம். இவரது துப்பறியும் திறமையே தனிப்பட்ட ஒன்று. அதனால்தான், அவர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்றாலும், நூறாண்டுகளுக்கும் மேலாக, நம்மிடையே உலவி வருகிறார். ஆனால் ஹோம்ஸுக்கு முன்பு கூட அவர் போன்ற கதாபாத்திரங்களை எட்கார் ஆலன் போ மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பேரறிஞர் வால்டேர் போன்ற சிலர் படைத்திருக்கிறார்கள். வால்டேர் தனது நண்பருக்காக, வேடிக்கையாக ஜடிக் என்ற அதிமேதையை வைத்து ஓர் அருமையான கதையைக் கூறினார்.

    ஜடிக் ஒரு அதிமேதாவி. இவர் ஒரு நாள் ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தபோது அரண்மனைச் சேவகர்கள் எதையோ தேடிக் கொண்டு மிகவும் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்ததைக் கண்டார்.

    அந்தச் சேவகர்கள் ஜடிக்கிடம் அவர் வரும் வழியில் ஒரு நாயைக் கண்டாரா என்று கேட்டனர். அந்நாய் மகாராணியினுடையது. அதைத்தான் அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

    ஜடிக், அவர்களிடம் அந்த நாயைப் பற்றி விவரித்தார். “ஒரு கட்டையான பெண் நாய். காதுகள் கீழே படும்படியாகத் தொங்கிக் கொண்டிருக்கும். சமீபத்தில்õன் குட்டிகளை ஈன்றது. அதனுடைய முன் வலது கால் சிறிது ஊனமாக இருக்கும்’ என்றார்.

    அவர்களும் ஆவலுடன் அந்த நாய் எங்கே சென்றது என்று கேட்கவும் அவர், “எனக்கு அரசியிடம் ஒரு நாய் இருப்பதே தெரியாது. நான் அதைப் பார்த்ததும் இல்லை’ என்றார். அவர்கள் ஏமாற்றமடைந்து நாயைத் தேடுவதைத் தொடர்ந்தனர்.

    அதே சமயம் அரசரின் பிரதான குதிரையையும் காணோம். அதைத் தேடியவாறு வந்த சேவர்களும் ஜடிக்கைப் பார்த்து அவரிடம் அரசரின் குதிரையை அவர் பார்த்தாரா என்று வினவினார்.

    ஜடிக் சொன்னார். “அந்தக் குதிரை 5 அடி உயரம், வாலின் நீளம் மூன்றரை அடி. நல்ல பாய்ச்சல் குதிரை. வெள்ளியாலான லாடம் கட்டப்பட்டது. அதன் சேணம் 23 காரட் தங்கத்தாலானது.’

    அவர்களும் மிக ஆர்வத்துடன் அக் குதிரை எந்தப் பக்கம் சென்றது என்று கேட்டார்கள். அவர் குதிரையைப் பார்க்கவில்லை என்று சொல்லவும் அவர்கள் அவரைக் கைது செய்து அரசர் முன் கொண்டு வந்தார்கள். விஷயத்தைக் கேள்வியுற்ற அரசர் ஜடிக்கை சைபீரியாவிற்கு நாடு கடத்தும்படியும், அவர் அபராதமாக 400 அவுன்ஸ் தங்கம் தரவேண்டும் என்றும் தண்டனை கொடுத்தார்.

    அப்போது, காணாமற்போன நாயும், அரசரின் குதிரையும் கிடைத்து விட்டதாகத் தகவல் வந்தது. அதனால் ஜடிக் பெற்ற நாடு கடத்தல் தண்டனையை ரத்து செய்து, அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுத்திட உத்தரவிட்டார.

    ஜடிக்கிடம் எப்படி அவரால் காணாமற்போன மிருகங்களை அவ்வளவு துல்லியமாக வர்ணிக்க முடிந்தது என்று அரசர் முதல் அவையில் இருந்த அனைவரும் கேட்டார்கள்.

    ஜடிக் சொன்னார்: “நான் சென்று கொண்டிருந்த மணற் பாங்கான சாலையில் ஒரு நாயின் காலடித் தடத்தைக் கண்டேன். அதன் முன்புறத்து வலதுகால் ஊனமாக இருந்ததால் அந்தக் கால் தடம் சரிவர காணப்படவில்லை; அதன் காதுகள் தரையைத் தொட்டுக் கொண்டு தொங்கியவாறு இருந்ததால் அந்தக் காதுகளின் தடயம் மண் பாதையில் தெரிந்தது. அது சமீபத்தில்தான் குட்டிகள் ஈன்றிருந்தபடியால் அதன் மடியும், காம்புகளும் மணலில் கோடாகத் தெரிந்தன. இந்த அடையாளங்களைக் கொண்டுதான் என்னால் நாயைப் பற்றிச் சரியாக ஊகித்துக் கூற முடிந்தது.’

    “குதிரை விஷயம் என்னவென்றால் நான் சென்று கொண்டிருந்த மண்பாதையின் அகலம் 7 அடி. குதிரை சரியான நாலுகால் பாய்ச்சலில் சென்றதால், அதன் வாலின் அசைவுகளால் சாலையோரம் இருந்த மரங்களில் தூசு இல்லாமல் இருந்தது. அதனால் குதிரையின் வால் மூன்றரை அடி நீளம் என்றேன். சுமார் 5 அடி உயரம் வரை மரங்களின் இலைகள் குதிரையின் தலையில் பட்டு உதிர்ந்திருக்கவே அது 5 அடி உயரம் இருக்கும் என்றேன். அதன் குளம்புகளின் தடங்களில் வெள்ளி ரேகைகள் தென்பட்டதால் அதற்கு வெள்ளியாலான லாடம் கட்டப்பட்டு இருக்கும் என்று சொன்னேன். அதனுடைய சேணம் ஒரு பாறையில் கீறிக்கொண்டு சென்றிருந்தது. அதனால் அந்தத் தங்கம் 23 காரட் என்றேன்’ இவ்வாறு அவர் விளக்கம் கூறவும் அரசரும் அவையோரும் அவரது புத்திகூர்மையைப் புகழ்ந்தார்கள்.

    ஆனாலும் என்ன! வழக்கை விசாரித்ததற்காக அவரிடமிருந்து 398 அவுன்ஸ் தங்கமும், மீதி 2 அவுன்ஸ் தங்கம் அரண்மனைச் சேவகர்களுக்கு பரிசாகவும் வசூலிக்கப்பட்டது.

    ஆக, ஜடிக்கின் மிதமிஞ்சிய புத்திக் கூர்மையால் அவருக்கு 400 அவுன்ஸ் தங்கம் இழப்பு! இதுதான் அவர் கண்ட பலன். தனது புத்திசாலித்தனத்திற்காகத் தன்னையே நொந்து கொண்டார்.

    0 comments:

    Post a Comment