Wednesday 3 September 2014

Tagged Under:

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

By: ram On: 06:46
  • Share The Gag
  • கடந்த சில வாரங்களுக்கு முன் ஒருநாள், சென்னை, விருகம்பாக்கம், சின்மயா நகரிலிருக்கும் சீனியரான ஒரு டாக்டரின் கிளினிக்கில் நாம் காத்திருந்தோம். அப்போது துவண்டு துவண்டு விழும் ஒரு குழந்தையுடன், இளம்பெற்றோர் அங்கே ஆஜரானார்கள். இருமல், தும்மல், மூச்சிரைப்பு என்று படாதபாடுபட்டுக் கொண்டிருந்தது அந்தப் பிஞ்சு. வெளியில் எட்டிப்பார்த்த டாக்டர், உடனடியாக ஒரு ஊசியைப் போட்டுவிட்டு, ''குழந்தை என் கண்காணிப்பிலேயே கொஞ்ச நேரம் இருக்கணும். அதனால, இங்க இருந்து போயிடாதீங்க...'' என்று சொல்லிவிட்டு, மற்ற நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்தார். இடையிடையே குழந்தை எப்படி இருக்கிறது என்றும் எட்டிப் பார்த்துக்கொண்டார்.

    அந்த இளம்பெற்றோர் டாக்டர் முன் அமர்ந்திருக்க, நாமும் அந்த நேரம் உள்ளே இருந்தோம் (ஒரு நோயாளி இருக்கும்போதே, இன்னொருவரையும் உள்ளே அழைத்து உட்கார வைப்பது இவருடைய வழக்கம்).

    அப்போது குழந்தை நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க... ''குழந்தையை ரொம்ப சீரியஸான கண்டிஷன்ல கொண்டு வந்திருக்கீங்க. பொதுவா இப்படிப்பட்ட கண்டிஷன்ல வந்தா... எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகச் சொல்லிடுவேன். ஆனா, அந்த நிலையிலயும் குழந்தை இல்ல. அதனால கடவுள் மேல பாரத்தைப் போட்டுத்தான் சிகிச்சையை ஆரம்பிச்சேன். குழந்தை பொழைச்சுடுச்சி. முதல்லயே சொன்னா பயந்துடுவீங்கனுதான் சொல்லல.

    ஒருவாரமா நீங்க ஒரு டாக்டர்கிட்ட குழந்தையைக் காட்டியிருக்கீங்க. அந்த டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து போலியானது. நீங்க கொண்டு வந்த இந்த சிரப்ல பாருங்க... ஏதோ ஒரு தெரு பேரைப் போட்டு, வளசரவாக்கம்னு எழுதியிருக்கு. இப்படி ஒரு மருந்து கம்பெனியே இல்ல. ஒருவேளை அந்தத் தெருவுல போய் விசாரிச்சீங்கனா... 'இது ஆபீஸ்... கம்பெனி காட்டாங்குளத்தூர்ல இருக்கு'னு பொய் சொல்லுவாங்க. ஆனா, விவரம் புரியாம இந்த மருந்தையே நீங்க கொடுத்திருக்கீங்க. அதேபோல, தேவையில்லாத ஆன்டிபயாடிக் மருந்தையும் கொடுத்திருக்கீங்க. இதையெல்லாம குழந்தைக்கு கொடுக்கவே கூடாது. அந்த டாக்டர் தெரிஞ்சுதான் எழுதினாரா... இல்லையாங்கிறது கடவுளுக்கே வெளிச்சம்'' என்று பெற்றோரிடம் சொன்ன டாக்டர், 'இனி யாச்சும் கவனமா இருங்க. குழந்தைக்கு ஏதாச்சும்னா.. எந்த நேரம் வேணும்னாலும் போன் பண்ணுங்க...' என்று சொல்லி அக்கறையோடு சொல்லி அனுப்பினார்.

    நம் பக்கம் திரும்பியவர், 'ம்... இப்படி மருந்து, மாத்திரைகள் விஷயத்துல ஏகப்பட்ட வில்லங்கம் நடக்குது. மக்களோட உயிரோட விளையாடறாங்க. சில டாக்டர்களும் இதுக்கு உடந்தையாயிட்டாங்க. அதேபோல, மக்களும் தாங்களாவே இஷ்டம்போல மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடறாங்க. என்ன பண்றது?' என்றபடியே... நமக்கான சிகிச்சையை முடித்து அனுப்பினார்.

    நமக்கு வந்த காய்ச்சல் குணமானது... ஆனால், டாக்டர் சொன்ன அந்த விஷயம், மூளைக்குள் போய் உட்கார்ந்துகொண்டு குடைய ஆரம்பித்துவிட்டது.

    ''சார், அமாக்ஸ்லின் (Amoxicillin) மாத்திரை பத்து கொடுங்க...''

    ''எனக்கு பெனிசிலின் (Penicillin) மாத்திரை ஒரு இருபது கொடுங்க...''

    - டாக்டர் பரிந்துரைத்த மருந்து சீட்டுடன், மருந்துக்கடைகளில் நாம் நின்று கொண்டிருக்கும்போது, பரபரவென்று வந்து நிற்கும் சிலர், இப்படி மாத்திரைகளின் பெயர்களைச் சொல்லிச் சொல்லி கேட்க... சட்டென்று கடைக்காரர் எடுத்துக் கொடுக்க... நம்மில் பலர் ஆச்சர்யமாக பார்த்திருப்போம் அவர்களை! 'அட, மாத்திரை பேரெல்லாம் என்ன அழகா தெரிஞ்சு வெச்சிருக்காங்க' என்று அவர்களைப் பற்றி பெருமிதமாக நினைத்தது நினைவுக்கு வந்தது.

    சிலர், 'எனக்கு பத்து நாளா வயித்த வலிக்குதுங்க. போன தடவை கொடுத்தீங்களே... அதே மாத்திரை பத்து கொடுங்க' என்று கேட்க...

    'புரூஃபென் மாத்திரைதானே... இதோ தர்றேன்' என்றபடி கடைக்காரர் எடுத்துக் கொடுக்க...

    'அட, இது தெரியாம நாம டாக்டர்கிட்ட இல்ல அடிக்கடி போறோம். நேரடியா இங்கயே வந்துட்டா... டாக்டர் செலவு மிச்சமாச்சே' என்று யோசித்ததும்... நினைவிலாடியது.

    ஆனால், இப்படி டாக்டரின் பரிந்துரை இல்லாமலும், ஏற்கெனவே ஒரு தடவை பரிந்துரைத்த மருந்து என்பதற்காகவும் இஷ்டம்போல மாத்திரைகளை வாங்கிச் சென்று பயன்படுத்துவது மிகமிக ஆபத்தானது என்கிற உண்மை, நன்றாகவே உறைத்தது! சொல்லப் போனால், டாக்டரின் பரிந்துரையோடு சாப்பிடும் மருந்து, மாத்திரைகளே... 'சைடு எஃபெக்ட்' என்ற பெயரில் வயிற்றுவலி, தலைவலி, அலர்ஜி என்று பலவித உபாதைகளைக் கொண்டுவந்து சேர்த் துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், டாக்டர் சொல்லாமலே மருந்துகளைச் சாப்பிடுவதும்... எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பதும் பெருங்கொடுமைதானே!

    நோய்கள் தீர்வதற்காகத்தான் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால், மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு, தனியாக சிகிச்சை எடுக்க வேண்டிய சூழலில்தான் இன்று வாழ்கிறோம். இதில் சுயமருத்துவம், அதிகமான ஆன்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி எடுத்துக்கொள்வது, மாதவிடாய் காலம், கர்ப்பம் தவிர்க்க என பெண்கள் சார்ந்திருக்கும் மாத்திரைகள், குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்... என இந்த மருந்து வகைகளால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்... தாராளம்!

    0 comments:

    Post a Comment