Sunday 28 September 2014

Tagged Under:

சர்க்கரை தடவிய இறைச்சி வறுவல் டிமென்ஷியா நோயை தோற்றுவிக்கும்

By: ram On: 10:18
  • Share The Gag
  • இறைச்சியை ஒரு குறிப்பிட்ட முறையில் சமைக்கும் விதம் காரணமாக, அந்த இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டிமென்சியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

    பிரவுனிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சமையல் முறையில் இறைச்சியில் பல்வேறு மசாலாக்கள் தடவி அதில் கொஞ்சம் சர்க்கரையையும் தடவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி சமைப்பது, அல்லது ஓவனில் வைத்து சமைப்பது அல்லது கிரில்லில் வைத்து வறுப்பது என்பது பரவலாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இப்படி செய்யும்போது, இதில் தடவப்பட்ட சர்க்கரையும், அந்த இறைச்சியில் இருக்கும் கொழுப்பும் சேரும் போது ஒருவிதமான பழுப்பு நிறமாக அந்த இறைச்சி மாறும். அந்த நிறமாற்றமும் அது தரும் சுவையும் தனித்துவமாக இருக்கும். பலருக்கு இந்த தனித்த ருசி மிகவும் பிடிக்கும்.

    இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும் உணவு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று நியூ யார்க்கில் இருக்கும் மவுண்ட் சினாய் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள். அதாவது இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும்போது இறைச்சியில் இருக்கும் புரதச்சத்து அல்லது கொழுப்பு சர்க்கரையுடன் சேர்ந்து எதிர்வினையாற்றும்போது அட்வான்ஸ்ட் கிளைகேஷன் எண்ட் என்கிற வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஏஜிஇ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கிறார்கள்.

    இப்படியான ஏஜியி வேதியியல் மாற்றம் ஏற்பட்ட உணவுகளை சாப்பிட்டால் இதனால் பலவகையான நோய்கள் உருவாகின்றன என்று ஏற்கெனவே மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை நோய் உருவாவதற்கு இந்தமாதிரி ஏஜியி வேதியியல் மாற்றம் ஏற்பட்ட உணவுகளும் முக்கிய காரணி என்று ஏற்கெனவே மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். தற்போது இத்தகைய உணவுகள், குறிப்பாக ஏஜிஇ வேதியியல் மாற்றம் ஏற்பட்டிருக்கும் இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் குறைப்பு நோய் அதிகரிப்பதாக நியூயார்க் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். எனவே இந்தமாதிரியான ஏஜிஇ வேதியியல் மாற்றத்துக்குள்ளான உணவுவகைகளை சாப்பிடாதீர்கள் என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

    இந்த மருத்துவ விஞ்ஞானிகளின் எச்சரிக்கை ஏற்கெனவே மருத்துவ உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக வந்திருப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல், வாழ்வியல் சிறப்பு மருத்துவர் வி கவுசல்யா.

    0 comments:

    Post a Comment