Wednesday 20 August 2014

Tagged Under: ,

மாமனார் இல்லாத புகுந்த வீடு...!

By: ram On: 10:39
  • Share The Gag

  • மாமனார் இல்லாத புகுந்த வீடு, பெரும்பாலும் பாதுகாப்பு இல்லாத வீடாக கருதப்படுகிறது. புதிதாக வாழ வரும் ஒரு மருமகளுக்கு, மாமியாரிடமிருந்து தாயின் நேசம் கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக மாமனாரிடம் இருந்து ஒரு தந்தையின் நேசம் கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.

    புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகிய இரண்டும் பெரும்பாலும் மாமனார்களிடம் இருக்கிறது. பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குள் நுழையும் ஒரு பெண்ணின் மனநிலையை மாமனாரால் புரிந்து கொள்ள முடியும். காரணம் வெளி உலக அனுபவம் மாமியாரைவிட மாமனாருக்கு அதிகம்.

    எப்போதும் மகனது தேவைகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் அம்மாக்களுக்கு மருமகளின் கனவுகள், உரிமைகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இந்த நிலையில் மாமனார் இல்லாத வீடு பெண்களுக்கு ஒரு குறையுள்ள வீடுதான்.

    தவறு செய்யும் நேரத்தில் காப்பாற்ற அக்கறைகொண்ட ஒருவரின் பாதுகாப்பு வேண்டும். பரிந்து பேசவும், அவள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறவும், அறிவு முதிர்ச்சியும், அனுபவமும் உள்ள ஒரு நபர் தேவை. இந்த முக்கிய இடத்தை நிரப்புவது மாமனார்தான்.

    மகன்- மருமகள் இடையில் ஏற்படும் சிறு பூசல்களுக்கும், மனஸ்தாபங்களுக்கும் மாமனார் தான் மருந்தாக இருப்பார். மகனை கண்டிக்கும் சக்தி மாமனாரைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்? மண வாழ்க்கையில் ஏற்படும் கசப்புகளை மனம் விட்டு யாரிடமும் சொல்லிவிட முடியாது. சொன்னாலும் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. அப்போதெல்லாம் மாமனார் இல்லாத குறை மருமகளை வாட்டும்.

    கணவன்-மனைவிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பக்குவமாக களைய அனுபவ முதிர்ச்சி தேவை. மருமகள் மீது குறையிருந்தாலும் எப்பாடுபட்டாவது வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து இருவரையும் சேர்த்து வைக்கும் உன்னத பணியை மாமனாரால் மட்டுமே செய்ய முடியும் என்பது பல பெண்களின் கருத்து.

    மாமியாருக்கும்- மருமகளுக்கும் இடையே ஏற்படும் தகராறுகளை சரிசெய்யவும் மாமனாரால் தான் முடியும். தனது மனைவியை அடக்கும் தைரியம் அவரிடம் மட்டுந்தானே இருக்க முடியும்!

    இளமையான அரசனுக்கு முதுமையான அமைச்சர் ஒருவர் இருந்தால் தான் நாடு வளம் பெறும் என்பது முன்னோர் வாக்கு. அப்படி ஒரு குடும்பத்தை வழிநடத்த மாமனாரின் அறிவுரை வேண்டியிருக்கிறது. தன் மகனுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதில் ஆழ்ந்த அறிவு தந்தைக்குத் தான் அதிகம் இருக்கிறது.

    ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் மாமனார் பெரும் பங்கு வகிக்கிறார். குடும்பத்தில் புதிதாய் பிரவேசிக்கும் ஒரு பெண்ணை மற்றவர்கள் புரிந்து கொண்டு நேசிக்கும் மனப்பக்குவம் வரும்வரை அந்தப் பெண்ணை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மாமனாருடையது. மாமனார் இல்லாத பல குடும்பங்களில் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணர்கிறார்கள். மருமகளுக்கு புகுந்த வீட்டில் மிக முக்கிய நபர் மாமனார். அவர் இல்லாத வீடு காவலாளி இல்லாத தோட்டம் போன்றது.

    0 comments:

    Post a Comment