Sunday 14 September 2014

Tagged Under:

தமிழ் சினிமாவின் வியாதிகள்!

By: ram On: 00:11
  • Share The Gag
  • தீபாவளியை முன்னிட்டு ஜவுளிக்கடையில் புது புது டிசைன்கள் வருவது, போல் தமிழ் சினிமாவிற்கும் ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் பல நோய்களை கண்டுபிடித்து விடுவார்கள் நம் கோலிவுட் இயக்குனர்கள். இதற்கு உபயமாக சில ஆங்கில பட டி.வி.டிக்களும் அவர்களுக்கு உதவும்.

    ஹார்ட் அட்டாக்

    தமிழ் சினிமா பிள்ளையார் சுழி போட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நோய் தான் இந்த ஹார்ட் அட்டாக். ஏதேனும் அதிர்ச்சியான செய்தியை கேட்டால் உடனே சட்டை பாக்கெட்டில் சில்லறை தேடுவது போல் கையை வைத்து மயங்கி விடுவார்கள். அதை கண்ட ஹீரோயின் வாயில் கையை வைத்த படி 11.1 ஆரோ சவுண்டில் கத்தி நம்மை கதிகலங்க வைத்து விடுவார்கள்.

    கேன்ஸர்

    பிறகு 80களில் தமிழ் சினிமா நடிகர், நடிகைகளை பிடித்த கொடுர நோய் தான் இந்த கேன்ஸர். இந்த நோய் வந்தால் இரத்த, இரத்தமா வாந்தி எடுத்து இறப்பார்கள் என்று சினிமா பார்த்து தான் எனக்கே தெரியும் என்று விவேக் சொல்வது போல் அந்த அளவிற்கு இந்த கொடிய நோய் திரையை தாண்டி நம்மையும் பிடித்தது.

    அதிலும் உலக நாயகன் கேன்ஸர் வந்து இறப்பது போல் நடித்த வாழ்வே மாயம் திரைப்படம் தான், கிளைமேக்ஸில் அவர் துப்பிய இரத்தம், முன் சீட்டு வரை விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    ஷாட் டெர்ம் மெமரி லாஸ்

    மறதி என்பது நம் வாழ்வில் சாதரணமாக நடக்கும் ஒன்று, எடுத்த பொருளை எந்த இடத்தில் வைத்தோம் என்று சிலர் புலம்புவார்கள், அப்படி மெமண்டோ என்ற ஆங்கில படத்தை பார்த்து சுட்டு எடுக்கப்பட்ட படம் தான் கஜினி. ஆனால் இதை தமிழ் மக்களிடம் ‘மறைத்தது’ இல்லாமல் ஹிந்தியிலும் கொண்டு போய் ஹிட் அடித்து விட்டார்கள்.

    இதை தொடர்ந்து இதேபோல் கதையம்சம் கொண்ட பல படங்கள் வர தொடங்கியது, அதில் குறிப்பாக எல்லோரையும் திருப்தி படுத்திய ஒரு படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். ’என்னாச்சு’ என்ற ஒரே வசனத்தை பேசி படம் முழுவதும் நமக்கு பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவார் விஜய் சேதுபதி.

    இதே கேட்டகிரியில் வந்த மேலும் சில படங்கள் எனக்கும் மறந்து விட்டது.

    மல்டிபுள் டிஸ் ஆர்டர்

    இந்த வகை நோயை நீங்கள் பொதுவாக உங்களுக்குள்ளே பார்க்கலாம். கடன் கேட்கும் போது மிகவும் பணிவாக அம்பியாக நின்று, அவன் பணம் கேட்டு வரும் போது அந்நியனாக மாறி ‘ நா எங்க உன்னிடம் பணம் வாங்கினேன்’ என்று அடித்து துரத்திவிடுவோம்.

    ஒரே சீசனில் இதே மன நோயை மையப்படுத்தி வெளிவந்த அந்நியன், சந்திரமுகி இரண்டு படமும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

    பை போலார் டிஸ் ஆர்டர்

    ரொம்ப டேஞ்ரான டிசிஸ்ங்க இது. நல்ல தான் பேசிட்டு இருப்பானுங்க திடீரென்று பீர் பாட்டில் எடுத்து நம்ம மண்டைய உடைச்சுடுவாங்க. இந்த நோயில் PHD முடித்தவர் தனுஷ். மயக்கம் என்ன, 3 போன்ற பல படங்களில் நடித்து தியேட்டரில் இருக்கும் நமக்கும் இந்த நோயை பரப்பியவர்.

    நார்க்கோளிப்ஸி

    இது தான் என்ன நோய்ன்னு கூகுளுக்கு கூட தெரியாது, இந்த சினிமா காரங்களுக்கு மட்டும் எங்க தான் தெரியுதோ? நைட்டு ஃபுல்லா தூங்காம வில்லன பழி வாங்கிய படம் தான் ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன். விடிஞ்சும் தூங்கி ஹீரோயின் கற்பழிக்கப்படும் போது கூட தூங்கி வழிஞ்சு விஷால் நடித்த படம் தான் சமீபத்தில் வந்த நான் சிகப்பு மனிதன்.

    இந்த நோய் குறித்து பெரிதும் வருத்தபட தேவையில்லை. நம்ம வழக்கமா ஸ்கூல், காலேஜ், ஆபிஸில் செய்வது தான், அதிலும் மதிய நேரம் இது வெகுவாக அனைவரையும் தாக்கும்.

    சரி இதோட இந்த நோய் கலாச்சரம் எல்லாம் முடிந்தது என்று நினைத்தால் மறுபடியும் நாய்கள் ஜாக்கிரதை படத்தில் ஏதோ ட்ரமாட்டிக், ஸ்டரஸ் டிஸ் ஆர்டர்ன்னு ஒரு நோய்யை கண்டுபிடிச்சுடானுங்க.......விடாது கருப்பு

    0 comments:

    Post a Comment