Wednesday 27 August 2014

Tagged Under: ,

விமலின் பரந்த மனசு நெகிழ்ந்த பள்ளிக்கூடம்!

By: ram On: 07:35
  • Share The Gag

  • ஒரே ஒரு இரவு போதும். விடிந்தால் ராஜாவை ஓட்டாண்டியாகவும், ஓட்டாண்டியை ராஜாவாகவும் மாற்றக் கூடிய மந்திரம் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. கோடம்பாக்கத்தில் அப்படியானவர்கள் நிறைய நிறைய. ‘விமல் ராஜாவாகவே ஆகட்டும்…’ என்று வாழ்த்துகிற நேரம் இது. அதற்காக அவர் ஒட்டாண்டியுமல்ல. அப்படி ஒரு காலத்தில் இருந்தவர். அவ்வளவுதான். போகட்டும்… அந்த சந்தோஷமான செய்திதான் என்ன?

    விமல் சொந்த பட நிறுவனத்தை துவங்கப் போகிறார். அதில் அவரே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இதற்காக நல்ல நல்ல கதைகளை கேட்க ஆரம்பித்திருக்கிறார். விஜய் சேதுபதி சொந்தப்படம் எடுக்க கிளம்பியதை போல ஆகாமல் இவராவது தேறி வரட்டும் என்று வாழ்த்தத்தான் வேண்டும். ஏனென்றால் விமலின் மனசு அப்படி. தான் நடிக்கும் படங்களின் ரிலீஸ் நேரத்தில் சம்பள பாக்கி இருந்தால், அந்த தயாரிப்பாளர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிற ரகம் அல்ல அவர். மாறாக, ‘நீங்க நல்லா வந்த பிறகு கொடுங்க சார்…’ என்று கூறி மனதார வழி விடுகிற டைப். அண்மையில் திரைக்கு வந்த ‘மஞ்ச பை’ படத்தில் கூட இவருக்கு பல லட்ச ரூபாய் சம்பள பாக்கியாம். சைலன்ட்டாக இருந்துவிட்டார் விமல். ‘தர்லேங்க. அதுக்காக என்ன பண்ணுறது?’ இவரது அதிக பட்ச விமர்சனமே இதுதான்.

    அடிப்படையிலேயே இப்படி நல்ல மனிதராக திகழும் விமல், பின்வரும் செயலை செய்திருப்பதில் பெரிய ஆச்சர்யம் ஏதும் இருக்கப் போவதில்லை. இருந்தாலும், நல்லதோ, கெட்டதோ? உலகுக்கு சொல்ல வேண்டிய இடத்திலிருப்பதால் சொல்கிறோம். அண்மையில் விமல் தனது சொந்த ஊரான மணப்பாறைக்கு சென்றிருந்தார். அப்படியே தான் படித்த பள்ளிக் கூடத்தை தாண்டி காரில் போய் கொண்டிருந்தாராம். ‘வண்டிய நிறுத்துப்பா…’ என்று கூறியவர் சடக்கென்று தனது பழைய நினைவுகளை மீட்டெடுக்க அந்த பள்ளிக்குள் நுழைந்துவிட்டார்.

    சந்தோஷத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தலை கால் புரியவில்லை. டீ, காபி, இளநீர் என்று அன்பை பொழிந்தார்களாம். ‘எங்கிட்ட ஏதாவது கேட்கணுமா?’ என்று விமல் ஆசிரியர்களிடம் கேட்க, ‘நம்ம பள்ளிக் கூடத்துக்கு ரெண்டு கம்ப்யூட்டர் வாங்கி கொடுங்களேன்’ என்றார்களாம் தயங்கி தயங்கி. அந்த ஸ்பாட்டிலேயே இரண்டரை லட்ச ரூபாய்க்கு செக் போட்டு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் விமல்.

    அடுத்தடுத்த விசிட்டுகளில் அதையே இரண்டரை கோடியாக அள்ளிக் கொடுக்கிற அளவுக்கு நீங்க வளரணும். வாழணும்… ! வாழ்த்துகிறோம் விமல்!

    0 comments:

    Post a Comment